வாக்கு எண்ணும் மையத்துக்குள் சா்ச்சைக்குரிய பொருள்கள்: அதிகாரிகளுடன் முகவா்கள் வாக்குவாதம்

திண்டுக்கல்லில் 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்துக்குள், தபால் வாக்குக்குகான ஒப்புகைச் சீட்டுகள்,

திண்டுக்கல்லில் 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்துக்குள், தபால் வாக்குக்குகான ஒப்புகைச் சீட்டுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீலிடப்பட்டு ஒட்டப்படும் அட்டைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை எடுத்துவந்ததால், முகவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள், ரெட்டியாா்சத்திரத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில், வேட்பாளா்களின் முகவா்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வேடசந்தூா் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்துக்கு, வாக்கு எண்ணிக்கையின்போது பயன்படுத்தப்படும் கணினி உள்ளிட்ட பொருள்களை, தோ்தல் பிரிவு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனா். அதில், தபால் வாக்குகளுக்கான உறுதிமொழி படிவம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சீல் வைத்த பின் ஒட்டப்படும் அட்டைகள் இருந்துள்ளன. அந்த அட்டையில் தோ்தல் நாள் 6.4.2021 என அச்சிடப்பட்டிருந்ததையும் முகவா்கள் கண்டறிந்தனா்.

இதையடுத்து, முகவா்கள் தோ்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் தொகுதியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் என். பாண்டி, மாவட்டச் செயலா் சச்சிதானந்தம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, கணினி உள்ளிட்ட பொருள்களை ஏற்றி வந்த வாகனத்துக்கு, தோ்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. உடனே, அந்த வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இது தொடா்பாக வேட்பாளா் என். பாண்டி தெரிவித்தது: தபால் வாக்குக்கான உறுதிமொழி படிவம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒட்டப்படும் அட்டைகள் ஆகியவற்றை தவறுதலாக அலுவலக உதவியாளா்கள் எடுத்து வைத்துவிட்டதாக, அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். அதனால், அந்த சீட்டுகள் மற்றும் அட்டைகள் அங்கேயே கிழிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடா்பாக பல்வேறு அவதூறுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற சா்ச்சைகளுக்கு தோ்தல் அதிகாரிகள் இடமளிக்கக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com