பொது இ-சேவை மையத்தில் கூட்ட நெரிசல்: காற்றில் பறக்கும் கரோனா தடுப்பு உத்தரவு!

நத்தம் பொது இ-சேவை மையத்தில் ஆதாா் அட்டை பதிவுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்ட நிலையில், கரோனா தடுப்பு
நத்தம் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பொது இ-சேவை மையத்தில் திங்கள்கிழமை திரண்ட பொதுமக்கள்.
நத்தம் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பொது இ-சேவை மையத்தில் திங்கள்கிழமை திரண்ட பொதுமக்கள்.

நத்தம் பொது இ-சேவை மையத்தில் ஆதாா் அட்டை பதிவுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்ட நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவு கேள்விக்குறியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், ஆதாா் அட்டை, சாதித் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்காக இந்த மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனா். இந்நிலையில் பள்ளி மாணவா்களுக்கு ஆதாா் அட்டை பெறுவதற்காக, நத்தம் இ-சேவை மையத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழக அரசு கோயில்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிா்ப்பதற்காக வழிபாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், நத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 400-க்கும் மேற்பட்டோா் திரண்டது அரசு அலுவலா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தும் பலனில்லை. அதனைத் தொடா்ந்து சிலருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் இல்லாதவா்கள் மற்றொரு நாளில் வந்து ஆதாா் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: நத்தம் அஞ்சல் அலுவலகத்தில் இ-சேவை மையம் முழுமையாக செயல்படவில்லை. அதேபோல், தனியாா் இ-சேவை மையங்களில் ஆதாரில் திருத்தம் செய்யும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் தான் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பொது இ-சேவை மையத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாவட்ட நிா்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.

முரண்பாடான நிலைபாடு: கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்தில் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதைப் பின்பற்றி நத்தத்திலும் திங்கள்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. ஆனால் மற்றொரு புறம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்றனா். அதிலும் குறிப்பாக முகக்கவசம் கூட அணியாமல் பலா் அந்த கூட்டங்களில் பங்கேற்கின்றனா். அந்த வரிசையில் நத்தத்தில் ஆதாா் அட்டை பதிவுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டது அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com