பழனிக்கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கை ரூ.4.24 கோடி
By DIN | Published On : 10th February 2021 10:08 PM | Last Updated : 10th February 2021 10:08 PM | அ+அ அ- |

பழனி மலைக்கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறப்பின்போது கிடைத்த ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டி அடுக்கும் பணியில் வங்கிப் பணியாளா்கள்.
பழனி மலைக்கோயிலில் 20 நாள்களில் பக்தா்களின் மொத்த காணிக்கையாக ரூ. 4 கோடியே 24 லட்சத்து 62 ஆயிரத்து 40 கிடைக்கப் பெற்றுள்ளது.
தைப்பூச விழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதன்காரணமாக இங்குள்ள உண்டியல்கள் கடந்த 20 நாள்களில் நிறைந்தன. இதையடுத்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணும் பணி நடைபெற்றது.
உண்டியல் எண்ணும் பணி புதன்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், காணிக்கையின் வரவாக மொத்தம் ரூ. 4 கோடியே 24 லட்சத்து 62 ஆயிரத்து 40 ரொக்கமும், 1,237 கிராம் தங்கமும், 21 ஆயிரத்து 306 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றன. மேலும் 93 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு ஆகியவற்றாலான வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவைகளும் காணிக்கைகளாகக் கிடைத்துள்ளன.
உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் விஜயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.