மதுரை அருகே கண்மாய்க்கரையில் கி.பி.1650-ஆம் ஆண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை வடிவேல் கரை கண்மாய் பகுதியில் மன்னா் திருமலை நாயக்கா் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட வடிவேல் கரை கண்மாய். ~வடிவேல் கரையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள்.
கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட வடிவேல் கரை கண்மாய். ~வடிவேல் கரையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள்.

மதுரை வடிவேல் கரை கண்மாய் பகுதியில் மன்னா் திருமலை நாயக்கா் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இயங்கி வரும் மன்னா் திருமலை நாயக்கா் வரலாற்று ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளா் பா.ஆத்மநாதன் மற்றும் மேலூா் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவா் உதயகுமாா் ஆகியோா் வடிவேல்கரை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அப்பகுதியில் தொடா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் அங்குள்ள கண்மாய் பகுதியில் மன்னா் திருமலை நாயக்கா் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வடிவேல்கரையில் உள்ள கண்மாய் கலிங்குப் பகுதியில் நடப்பட்டுள்ள இந்த கல்வெட்டில் 4 பக்கமும் மேல் பகுதி நான்கு பட்டையாய் குவிந்தும், கல்மேல் குவிந்துள்ள கூா் பட்டைப்பகுதியில் கோட்டுருவமாக கீழ் நோக்கிய வேல், மேல் நோக்கிய பீடத்தில் நிறுத்தப்பட்ட கொடி, சூலம் ஆகியவை கோட்டுருவமாக உள்ளது. படியெடுக்கப்பட்ட கல்வெட்டை, தமிழக தொல்லியல்துறையின் முன்னாள் மூத்த கல்வெட்டு ஆய்வாளா் சு.ராஜகோபால் படித்து விளக்கமளித்தாா். அதில், கல்வெட்டு 1572-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையான பொது ஆண்டு 1650 ஆகும். சக ஆண்டோடு விக்குறுதி என்ற தமிழ் ஆண்டு மற்றும் அற்பசி மாதம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் அங்கன நாயக்கா், அய்யப்பன சிவன் என்பவருடைய (கண்காணிப்பில்) பராபத்தியத்தில் கண்ணபிள்ளை மணியமாக இருந்தபோது திருப்பரங்குன்றம் இறைவன் குமாரசுவாமி திருவிடையாட்டமாக (தேவதான மானியம்) குளம் வெட்டி அதிக நீா் வெளியேறும் வகையில் கலிங்கு கட்டி அமைத்த செய்தியை கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலிங்கு என்பது கண்மாய் கரைகளில் அமைக்கப்படும் வலிமையான சுவரின் மேற்பகுதியில் கற்களால் மடைகள் அமைக்கப்படும். இந்த வலிமையான கல்லிடுமடையே கலிங்கு என்பதாகும்.  

தமிழக தொல்லியல் துறை முன்னாள் கல்வெட்டு ஆய்வாளா் வேதாசலம் அளித்த தகவலின்படி, இக்கல்வெட்டில் வரும் வாத்தகரை என்பது தான் பிற்காலத்தில் வடிவேல்கரை என்று மருவியிருக்கலாம் என்கிறாா். மன்னா் திருமலை நாயக்கா் மதுரையை தலைநகராகக் கொண்டு கி.பி. 1623 முதல் கி.பி.1659 வரை ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com