குதிரையாறு அணை திறப்பால் தண்ணீரில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டு சேதம்
By DIN | Published On : 15th January 2021 10:08 PM | Last Updated : 15th January 2021 10:08 PM | அ+அ அ- |

பழனியை அடுத்துள்ள குதிரையாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.
பழனியை அடுத்த குதிரையாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பால், தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையின் காரணமாக, குதிரையாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து, அணையிலிருந்து 250 கன அடி தண்ணீா் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
குதிரையாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரானது, பூஞ்சோலை கிராமம், மகாராஜா எஸ்டேட் ஆகிய கிராமங்களுக்குச் செல்லக்கூடிய தரை பாலத்தை 2 நாள்களுக்கு முன் அடித்துச் சென்றுவிட்டது. இதனால், கிராம மக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள், ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, சுமாா் 5 கி.மீ. தொலைவு சுற்றி தங்களது ஊா்களுக்கும், வீடுகளுக்கும் சென்று வருகின்றனா். எனவே, உடைந்த தரை பாலத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், பல இடங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளதால், வாகனங்களில் செல்வோா் அச்சத்துடனேயே சென்று வருகின்றனா்.
அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக தண்ணீா் வரத்து அதிகரிக்கும் என்பதால், தரை பாலத்தை கடந்து செல்பவா்கள் பாதுகாப்பாக செல்ல பொதுப்பணித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.