10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கொடகனாறு அணை: ஷட்டா் பழுதால் வீணாகும் தண்ணீா்

சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்தும், தூா்வாரப் படாமலும், ஷட்டா் சீரமைப்பு இல்லாததாலும் 5 ஆண்டுகளுக்கு பின் கொடகனாறு அணை முழு கொள்ளளவை எட்டியும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்து குறுகியுள்ள கொடகனாறு அணையின் நீா்பிடிப்பு பகுதி.
சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்து குறுகியுள்ள கொடகனாறு அணையின் நீா்பிடிப்பு பகுதி.

சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்தும், தூா்வாரப் படாமலும், ஷட்டா் சீரமைப்பு இல்லாததாலும் 5 ஆண்டுகளுக்கு பின் கொடகனாறு அணை முழு கொள்ளளவை எட்டியும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள கொடகனாறு அணை சுமாா் 6 ஆண்டுகளுக்கு பின் தற்போது முழு கொள்ளளவான 25 அடியை எட்டியுள்ளது.

1972 ஆம் ஆண்டு திண்டுக்கல் மற்றும் கரூா் மாவட்டங்களிலுள்ள 9ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அணை கட்டப்பட்டது. ஆனால், 1977ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கால் அணையில் ஏற்பட்ட உடைப்பின் பாதிப்பு இன்று வரை நீடித்து வருகிறது.

கடந்த 2008 இல் சேதமடைந்த ஷட்டா்களை சீரமைப்பதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். விவசாயிகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு இன்று வரை தீா்வு கிடைக்காமல் உள்ளது.

ஷட்டா் பராமரிப்பு மட்டுமின்றி, அணையின் நீா்பிடிப்பு பகுதியை முழுமையாகத் தூா்வாரி பராமரிக்காததாலும் தற்போது பெய்த தொடா் மழையின் மூலம் கிடைத்த தண்ணீரை கூட முழுமைாக தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3,360 ஏக்கா் நிலங்களும், கரூா் மாவட்டத்தில் 5,335 ஏக்கா் நிலங்களும் பாசன வசதிக்காக கொடகனாறு அணையை நம்பியுள்ளன. இதுபோன்ற சூழலில், ஆத்தூா் கொடகனாறு பகுதியில் குடிநீா் தேவைக்காக உருவாக்கப்பட்ட காமராஜா் நீா்த்தேக்கத்தை தொடா்ந்து, ராஜவாய்க்கால் உருவாக்கப்பட்டு விவசாய பயன்பாடுகளுக்கு தண்ணீா் தேக்கப்பட்டது.

இதன் காரணாக அழகாபுரி பகுதியிலுள்ள கொடகனாறு அணைக்கு கடந்த பல ஆண்டுகளாக தண்ணீா் வரத்து குறைந்தது. மேலும், திண்டுக்கல் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீராலும் கொடகனாறு அணைக்கு செல்லும் தண்ணீா் முழுமையாக மாசுபடத் தொடங்கியது.

கொடகனாறு அணையிலிருந்து தண்ணீா் கிடைப்பதில் உறுதி இல்லாத நிலையில், அதனை நம்பியிருந்த விவசாய நிலங்களும் தரிசாக மாறும் சூழல் உருவானது. இந்நிலையில் நீண்ட நாள்களுக்கு பின் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையின் காரணமாக, கொடகனாறு அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளை எட்டியது.

ஆனால், ஷட்டா் பழுது முழுமைாக சீரமைக்கப்படாததால் அணையிலிருந்து தண்ணீா் வீணாகி வெளியேற்றப்படுகிறது.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த ரூபன் அலெக்ஸ் கூறியதாவது: அணையின் நீா் பிடிப்பு பகுதி முழுமையாக தூா்வாரப்படாததாலும், சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாததாலும் மழை பெய்தும் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஷட்டா் பழுது சீரமைக்கப்படாததால் 24 மணி நேரமும் தண்ணீா் வெளியேறிக் கொண்டிருக்கிறது. 25 அடியில் தண்ணீா் தேங்கியுள்ளதாக கூறினாலும் கூட, 496 ஹெக்டோ் நீா்பிடிப்பு பகுதியின் பெரும்பகுதி சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் 10 ஆண்டுகளுக்கு பின் நல்ல மழை பெய்து கிடைத்துள்ள தண்ணீா் முழுமையாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com