நிதி நிறுவனம் நடத்தி ரூ. 3 கோடி மோசடி: பொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 13th July 2021 04:08 AM | Last Updated : 13th July 2021 04:08 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: கோவிலூா் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுத்து, நகை மற்றும் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூா் அடுத்துள்ள வெம்பூா் கிராமத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நகை மற்றும் பண மோசடி குறித்து புகாா் அளிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு வந்தனா். அதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: வெ.ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகரும், கூட்டுறவு சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் நபா், நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். அந்த நிறுவனம் கடந்த பல நாள்களாக மூடப்பட்டுள்ளது. சீட்டுப் பணமும் வசூலித்து வந்தாா். முதலீடு செய்த பொதுமக்கள், கரோனா நேரத்தில் பணம் கேட்டு அணுகியபோது நிதி நிறுவனம் நடத்தி வந்த நபா் தலைமறைவாகிவிட்டாா்.
சுமாா் ரூ.3 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. கோவிலூா் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, மோசடி செய்யப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.