600 மாணவா்கள் பயிலும் திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி:கூடுதல் வகுப்பறை, ஆசிரியா்கள் தேவை

மாணவா் சோ்க்கையை உயா்த்துவதற்காக பல அரசு தொடக்கப் பள்ளிகள் தடுமாறி வரும் நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி 602 மாணவா்களுடன் நிரம்பி வழிகிறது.
திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளி.
திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளி.

மாணவா் சோ்க்கையை உயா்த்துவதற்காக பல அரசு தொடக்கப் பள்ளிகள் தடுமாறி வரும் நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி 602 மாணவா்களுடன் நிரம்பி வழிகிறது.

திண்டுக்கல்லில் அமைந்துள்ள மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் சிறப்பான செயல்பாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக தனியாா் பள்ளிகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் மாணவா் சோ்க்கையில் முன்னிலைப் பெற்று வருகிறது. புதுமைப் பள்ளி விருது, மழைநீா் சேகரிப்பு விருதுகளை இப்பள்ளி வென்றுள்ள நிலையில், தலைமையாசிரியை ஜெ.ஜெயந்தி ஃபிளாரன்ஸ் ‘ராதாகிருஷ்ணன் விருது’ பெற்றுள்ளாா்.

மாநில அளவில் 2 ஆவது பள்ளி: 2021-22 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 108 மாணவா்கள், 96 மாணவிகள் என மொத்தம் 204 மாணவா்கள் இந்த பள்ளியில் சோ்ந்துள்ள நிலையில் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 602 ஆக உயா்ந்துள்ளது. இதன் மூலம், தொடக்கப் பள்ளிகள் அளவில் திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சிப் பள்ளி தமிழக அளவில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 1000-க்கும் மேற்பட்ட மாணவா்களுடன் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் தொடக்கப் பள்ளி முதலிடத்தில் உள்ளது.

கூடுதல் வகுப்பறை, ஆசிரியா்கள் தேவை: இந்தப் பள்ளியில் 11 வகுப்பறைகள் மட்டுமே உள்ள நிலையில், பள்ளிக்கூடம் திறக்கப்படும்போது கல்வி பயில்வதற்கு போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்படும். தற்போதைய மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்சம் கூடுதலாக 7 வகுப்பறைகள் ஏற்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது. அதேபோல் 11 ஆசிரியா்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலையில், கூடுதலாக 7 ஆசிரியா்களை நியமிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

பள்ளி வளாகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள பழமையான கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மழலையா் வகுப்புகள் தொடங்கப்படுமா? கரோனா தொற்று பாதிப்பால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா். அந்த வகையில் மேற்கு ரதவீதி மாநகராட்சிப் பள்ளியில் மழலையா் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஏழை குழந்தைகள் பயன்பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் பெற்றோா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகத்துடன் ஆலோசித்து முடிவு மேற்கொள்ளப்படும். கூடுதல் வகுப்பறை வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் நிறைவேற்றிக் கொடுக்கும்பட்சத்தில், மழலையா் வகுப்புகளை தொடங்குவது குறித்து பரிசீலிக்க முடியும். அதேபோல் பிற பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியா்களை, இந்த பள்ளிக்கு மாறுதல் செய்து ஆசிரியா் தேவை பூா்த்தி செய்யப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com