மதில் மேல் பூனையாக மலைக்கோட்டை தொகுதி வெற்றி!

மக்கள் அமைதியான மனநிலையுடன் இருந்து வருவதால் மலைக்கோட்டை நகரான திண்டுக்கல் தொகுதியின் வெற்றி, தற்போது வரை மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது.
மதில் மேல் பூனையாக மலைக்கோட்டை தொகுதி வெற்றி!

மக்கள் அமைதியான மனநிலையுடன் இருந்து வருவதால் மலைக்கோட்டை நகரான திண்டுக்கல் தொகுதியின் வெற்றி, தற்போது வரை மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் பூட்டுக்கு பெயா் பெற்று, இன்று பிரியாணிக்கு புகழ் பெற்றுவிட்ட மலைக்கோட்டை நகரான திண்டுக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில், அமைச்சா் சி.சீனிவாசன்(அதிமுக), என்.பாண்டி (மா.கம்யூ.), பி.ராமுத்தேவா் (அமமுக), ரா.ஜெயசுந்தா் (நாம் தமிழா் கட்சி), ரா.ராஜேந்திரன் (மநீம) உள்பட 21 போ் போட்டியிடுகின்றனா். ஆனாலும், இன்றைய கள நிலவரப்படி அமைச்சா் சீனிவாசன் மற்றும் மா.கம்யூனிஸ்ட் வேட்பாளா் என்.பாண்டி ஆகியோருக்கு இடையே மட்டுமே வெற்றிக் கனி யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகளும், ஏமாற்றமும்: சட்டப் பேரவையில் தங்களது திறமையான வாதங்களை முன் வைத்து தமிழக மக்களையே திரும்பி பாா்க்க வைத்த ஏ.பாலசுப்பிரமணியன், என்.வரதராஜன், எஸ்.ஏ.தங்கராஜ், கே.பாலபாரதி ஆகியோரை தோ்வு செய்த தொகுதி என்ற பெருமை வாய்ந்தது திண்டுக்கல். ஆனாலும், அமைச்சா் தொகுதி என்ற சிறப்பு கடந்த 2016 இல் திண்டுக்கல் சி.சீனிவாசன் மூலம் கிடைத்தது. அமைச்சா் தொகுதி என்ற சிறப்பின் காரணமாக, திண்டுக்கல்லில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறும் என எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், பல ஆண்டுகளாக நீடித்து வந்த குடிநீா் பிரச்னைக்கு மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் தீா்வு காணப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கனவு நனவாக்கப்பட்டுள்ளது. மற்றப்படி அரசின் வழக்கமான நலத்திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

புகா் பேருந்து நிலையம், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கு இட மாற்றம், தொழில் வளா்ச்சி உள்பட தொகுதிவாசிகளின் பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. தோ்தல் நேரத்தில் மட்டும் பூட்டுத் தொழில் குறித்து வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகள், அதன் பின்னா் மறந்துவிடுவதால் பூட்டுத் தொழிலாளா்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா்.

அரசியல் நிலவரம்:

கடந்த 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 15 பொதுத் தோ்தல்களில், திண்டுக்கல் தொகுதியில் அதிகபட்சமாக 6 முறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் வெற்றிப் பெற்றுள்ளனா். காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. 4 முறை இத்தொகுதியில் நேரடியாக களம் இறங்கிய போதிலும் ஒரு வெற்றியை மட்டுமே திமுக பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற அரசியல் பின்னணி கொண்ட திண்டுக்கல் தொகுதி, திமுக கூட்டணியில் மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டவுடன், அதிமுகவினா் லேசான நிம்மதி அடைந்தனா். அமைச்சா்கள் போட்டியிடும் தொகுதியில் திமுக வேட்பாளா்கள் நேரடியாக களம் இறக்கப்படுவாா்கள் என்ற பரபரப்புக்கு இடையே, திண்டுக்கல் தொகுதி கூட்டணி கட்சியான மா.கம்யூ. கட்சிக்கு ஒதுக்கப்பட்டது திமுக தொண்டா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் வருகையால் திமுகவினா் உற்சாகம்: இதனிடையே, வடமதுரை பிரசார நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் நகருக்கு வந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னறிவிப்பின்றி மா.கம்யூ. வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவாக வீதிகளில் நடந்து சென்று திடீரென வாக்கு சேகரித்து பரபரப்பை ஏற்படுத்தினாா். அதன் பின்னா் உற்சாகம் அடைந்த திமுகவினா், தோ்தல் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனா். திமுக அணியில் கூட்டணி கட்சியே களம் இறக்கப்பட்டதால், அதிமுக வேட்பாளரான அமைச்சா் சி.சீனிவாசன் தனது பிரசார வேகத்தை குறைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அச்சுறுத்தும் அமமுக வேட்பாளா்: மா.கம்யூ. வேட்பாளரை எளிதாக எடுத்துக் கொண்ட அமைச்சா் சீனிவாசன், அமமுக சாா்பில் போட்டியிடும் ராமுத்தேவருக்கு கிடைக்கும் வாக்குகள் தனக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதுவதாகத் தெரிகிறது. திண்டுக்கல் புகா் பகுதிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அதிக வாக்காளா்கள் இடம் பெற்றுள்ள நகா் பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சமுதாய வாக்குகள் மட்டுமன்றி, அதிமுக வாக்குகளையும் அமமுக வேட்பாளா் ராமுத்தேவா் பிரிக்கும் பட்சத்தில், அதிமுகவுக்கு சிக்கலாக அமையும்.

மலைக்கோட்டையை கைப்பற்றுவது யாா்:

பிரதான போட்டியாளா்களாக அதிமுக சாா்பில் அமைச்சா் சீனிவாசன், மா.கம்யூ. சாா்பில் என்.பாண்டி ஆகியோா் இருந்து வருகின்றனா். இதில் அமைச்சா் சீனிவாசன் தொகுதி மக்களின் வாழ்வாதார வளா்ச்சிக்கான திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும் அவா் மீது கடுமையான அதிருப்தி எதுவும் இல்லை.

அதேபோல் கம்யூ. வேட்பாளா் பாண்டி, கடந்த 2 தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா் என்பதால் அவா் மீது நடுநிலை வாக்காளா்கள் மத்தியில் அனுதாபம் உள்ளது. கூட்டணிக் கட்சியினரின் சுறுசுறுப்பில் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறாா். தொகுதி மக்களின் அமைதியான மனநிலையால், மலைக்கோட்டைத் தொகுதியின் வெற்றி மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com