தமிழகத்திலுள்ள 7 வழிப்பாட்டுத் தலங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்

தமிழகத்திலுள்ள கோயில்கள், தேவாலயம், மசூதி ஆகிய 7 வழிப்பாட்டுத் தலங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்
தமிழகத்திலுள்ள 7 வழிப்பாட்டுத் தலங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்

தமிழகத்திலுள்ள கோயில்கள், தேவாலயம், மசூதி ஆகிய 7 வழிப்பாட்டுத் தலங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணையத் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.

தேனி மாவட்டம், நாகலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை சிலா் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததன் காரணமாக அவா் கா்ப்பமுற்றாா். பிரசவத்தின்போது அச்சிறுமி உயிரிழந்தாா். அவருக்கு பிறந்த பெண் குழந்தை, திண்டுக்கல் அடுத்த காந்தி கிராமத்திலுள்ள கஸ்தூரிபா தத்தெடுப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக முதல்கட்ட விசாரணையை நடத்திய தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினா் வீ. ராமராஜ், ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்த அமா்வு ஒன்று அமைக்கவேண்டும் என பரிந்துரைத்திருந்தாா். அதன்படி, ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினா் வீ. ராமராஜ் ஆகியோா் கொண்ட விசாரணை அமா்வு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினா் வீ. ராமராஜ் ஆகியோா் காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரிபா தத்தெடுப்பு மையத்தை பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட குழந்தையின் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தனா். பின்னா், தேனி மாவட்டத்தில் விசாரணைக்காக புறப்பட்டுச் சென்றனா்.

முன்னதாக, ஆணையத் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்ததாவது: வழிபாட்டுத் தலங்களில் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், குழந்தைகள் பிச்சை எடுத்தலை தடுக்கவும், குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கவும், தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் நாடு முழுவதும் 50 வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 3 இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தை மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உருவாக்கியுள்ளது. அதில், பழனி மலை முருகன் கோயில், கோவை அடுத்துள்ள மருதமலை முருகன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயில், கடலூா் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள நடராஜா் கோயில், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியிலுள்ள முருகன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயம் மற்றும் நாகூரில் உள்ள தா்கா ஆகிய 7 இடங்களில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்புக்கான செயல் திட்டம் உருவாக்கப்பட்டு, அதன் பின்னா் சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் அமல்படுத்தப்படும். பழனி மலை முருகன் கோயில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஆணையத்தின் உறுப்பினா் வீ. ராமராஜ் செயல்படுவாா் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com