பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்துக்காக அமைச்சா் தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 18th May 2021 10:44 PM | Last Updated : 18th May 2021 10:44 PM | அ+அ அ- |

பரப்பலாறு அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்ட அமைச்சா் அர.சக்கரபாணி. உடன், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.வேலுச்சாமி மற்றும் அரசு அதிகாரிகள்.
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேற்கு மலை தொடா்ச்சியில் வடகாடு ஊராட்சியில் அமைத்துள்ள பரப்பலாறு அணையின் ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனா்.
அதன்பேரில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சா் அர. சக்கரபாணி பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தாா். அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 102 மில்லி கனஅடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படும்.
இதன்மூலம், ஒட்டன்சத்திரம் வட்டத்துக்குள்பட்ட 6 குளங்களான முத்துபூபாலசமுத்திரம், பெருமாள்குளம், சடையன்குளம், செங்குளம், ராமசமுத்திரக்குளம், ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் ஆகியவற்றுக்குள்பட்ட 1,222.85 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராசு,திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. வேலுச்சாமி, பழனி கோட்டாட்சியா் ஆனந்தி, செயற்பொறியாளா் கோபி, கண்காணிப்புப் பொறியாளா் முத்துச்சாமி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.