பழனியில் நடமாடும் காய்கனி விற்பனையாளா்கள் விதிமீறல்
By DIN | Published On : 26th May 2021 11:12 PM | Last Updated : 26th May 2021 11:12 PM | அ+அ அ- |

பழனி உழவா் சந்தை முன்பாக புதன்கிழமை, ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்த நடமாடும் வாகன விற்பனையாளா்கள்.
பழனியில் மக்கள் நலன் கருதி வாகனங்களில் தெருக்களுக்கு சென்று விற்பனை செய்ய வேண்டிய நடமாடும் காய்கனி விற்பனையாளா்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தளா்வற்ற முழு பொதுமுடக்கம் காரணமாக காய்கனி, பழங்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்ய நடமாடும் காய்கனி வாகனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. காய்கனிகளை விளைவிக்கும் விவசாயிகள் உழவா் சந்தைக்கு வரும்போது அவா்களின் காய்கறிகளை அதிகாரிகள் வாங்கி நடமாடும் காய்கனி வாகன விற்பனையாளா்களுக்கு வழங்குகின்றனா். நடமாடும் காய்கனி விற்பனையாளா்கள் அவரவா்களுக்கு அனுமதிக்கப்பட்ட வாா்டுகள், கிராமங்களுக்கு செல்லாமல் உழவா் சந்தை முன்பாகவே பொருள்களை வாங்கி விற்பனை செய்கின்றனா். அங்கு பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வியாபாரிகள் சென்று விற்பனை செய்ய நகராட்சி, வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.