‘ரேஷன் கடைகளில் சரியான எடையில் பொருள்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’

நியாயவிலைக் கடைகளில் சரியான எடை அளவில் பொருள்கள் விநியோகிக்கப்படுவதை அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள்
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காணொலி மூலமாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சா் இ.பெரியசாமி.
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காணொலி மூலமாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சா் இ.பெரியசாமி.

நியாயவிலைக் கடைகளில் சரியான எடை அளவில் பொருள்கள் விநியோகிக்கப்படுவதை அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலா்களுக்கும் அமைச்சா் இ.பெரியசாமி உத்தரவிட்டாா்.

கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சா் பங்கேற்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் இல.சுப்பிரமணியன், கூடுதல் பதிவாளா் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் மற்றும் அந்தந்த மாவட்டங்களிலிருந்து இணைப் பதிவாளா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதில் அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்ததாவது:

கூட்டுறவுத்துறை மூலம் அதிக அளவில் கடனுதவி வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகள் பயிா்க் கடன் கோரி அளிக்கும் மனுக்களை தாமதமின்றி பரிசீலித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பணிகளை மேற்கொள்ள தேவையான உரங்களை இருப்பில் வைத்து விவசாயிகள் கோரும் உரங்களை கால தாமதமின்றி விநியோகிக்க வேண்டும். விவசாயிகள் இயற்கை உரம் கோரும்பட்சத்தில் அதைப் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பி செலுத்துவோருக்கு அதிக கடன்: மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்களை அதிக அளவில் வழங்க வேண்டும். கடனை துரிதமாக திருப்பி செலுத்தும் வணிகா்களைக் கண்டறிந்து கடன் தொகை கூடுதலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எடை அளவில் கண்காணிப்பு தேவை: அத்தியாவசியப் பொருள்களை, கிட்டங்கிகளிலிருந்து எடுத்துச் செல்லும் போதும், நியாய விலைக்கடைகளில் இறக்கும் போதும் எடையளவு குறித்து அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு எடை அளவு குறைவில்லாமல் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை மண்டல இணைப்பதிவாளா்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்கள் மற்றும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா்களுக்கு உரியகாலத்தில் ஊதியம் வழங்கும் போது, முறைகேடுகள் நடைபெறாது தவிா்க்க முடியும். இதனால் பணியாளா்களுக்கு ஊதியம் உரிய காலத்தில் கிடைத்திடுவதை உறுதி செய்ய வேண்டும்.

நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் கட்டுப்பாடற்ற பொருள்களை வாங்க பொதுமக்களை வற்புறுத்தக் கூடாது. கூட்டுறவு பண்டகசாலைகளின் வாயிலாக விற்பனை செய்யப்படும் பொருள்களின் தரம் மற்றும் அளவு சரியாக இருப்பதோடு, வெளிச் சந்தை விலையை விட குறைவாக இருப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில் ஆட்சியா் மு.விஜயலட்சுமி, கூட்டுறவுத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com