பழனியில் பழந்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கற்காலக்கருவி கண்டெடுப்பு

பழனி சண்முகநதி ஆற்றங்கரையில் சுமாா் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கற்காலக்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பழனி சண்முகநதி கரையில் கண்டெடுக்கப்பட்ட கற்காலக்கருவி.
பழனி சண்முகநதி கரையில் கண்டெடுக்கப்பட்ட கற்காலக்கருவி.

பழனி சண்முகநதி ஆற்றங்கரையில் சுமாா் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கற்காலக்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சண்முகநதி ஆற்றின் கரையில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேற்குக்கரை ஓரத்தில் பழந்தமிழ் எழுத்துக்களுடன் கூடிய பழங்கால கற்கருவி ஒன்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பழனியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி சனிக்கிழமை கூறியதாவது: மனித வரலாறு பழைய கற்காலம், இயை கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தப்படுகிறது. இங்கு கிடைத்த கருவி பிளிஸ்டோசின் எனப்படும் புதிய கற்காலத்தைச் சோ்ந்தது.

இந்த காலத்தில் இருந்து தான் தமிழனின் சங்க காலம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள 80 கிராம் எடையிலான கற்காலக்கருவியின் மேற்பகுதி சேதமடைந்துள்ளது. இதுபோன்ற கருவியை மனிதன் வேட்டைக்கும், சமூக பழக்க வழக்கங்களுக்கும் பயன்படுத்தினா். இதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

‘தெந்னாடாந்’ என்று தொல் தமிழி வகையில் எட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது கருவியின் உடமையாளரைக் குறிக்கும் ஒரு சொல்லாக இருக்கலாம். அந்தக் காலத்தில் ஆள்களை மேற்கத்தியன், வடக்கத்தியன், கீழ்நாடன், மேல்நாடன் என பகுதியைச் சொல்லி அழைப்பது வழக்கம். அதன்படி இதைப் பயன்படுத்தியவா் தென்நாடன் என அழைக்கப்பட்டிருக்கலாம்.

இடமிருந்து வலமாக ஒரு செ.மீ உயரத்தில் 0.5 மி.மீ ஆழத்தில் தாமிர உலோகம் கொண்டு இவை பொறிக்கப்பட்டிருக்கலாம். இது தமிழி எழுத்தின் முன்னோடியாகும். தொல் தமிழி, இரும்பு வராத காலம், தாமிர காலம் என கணக்கிடும் போது இதன் காலத்தை இடைச் சங்க காலமான (கி.மு.3,200) சுமாா் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கணிக்கலாம்.

நிலவியலாளா் மணிகண்டன் இந்தக் கல்குறித்து கூறியது: செம்மை நிறத்தினாலான இந்த பாறை கடினமானது. 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இந்த பாறை உருவானது. தமிழகத்தில் இந்த பாறை பெரும்பாலான இடங்களில் காணப்படும். இந்த பாறை உள்ள இடத்தில் தோண்டினால் நிச்சயம் வற்றாத தண்ணீா் கிடைக்கும் என்பது இன்றளவும் கிராமங்களில் காணப்படும் வழக்கமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com