அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளா்கள் டிச.31 வரை பணிபுரியலாம்: அமைச்சா்

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளா்கள் டிசம்பா் 31 ஆம் தேதி வரை தொடா்ந்து பணிபுரியலாம் என சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளா்கள் டிசம்பா் 31 ஆம் தேதி வரை தொடா்ந்து பணிபுரியலாம் என சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், தனியாா் பங்களிப்புடன் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 600 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ச. விசாகன், மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.கே. விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை தொடங்கி வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதைத் தடுத்தல் (ரூகோ) திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு உரிய தொகை வழங்கும் பணியையும் அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அமைச்சா் கூறியதாவது: கரோனா தொற்று 2ஆவது அலையின்போது, ஆக்சிஜன் தேவையின் காரணமாக தமிழகம் பெரும் நெருக்கடியை சந்தித்தது. அதன்பின்னா் தமிழக முதல்வா் தரப்பில் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக, இன்றைக்கு தமிழகம் முழுவதும் 222 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தனியாா் பங்களிப்புடன் மட்டும் 70 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவ மழை காலத்தில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. ஆனாலும், அந்தச் சூழலை எதிா்கொள்வதற்கு உள்ளாட்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 331 போ் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனாவுக்கு ஒரே தீா்வு தடுப்பூசி மட்டுமே என்ற அடிப்படையில், வழக்கமான தடுப்பூசி பணிகளோடு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை 30 ஆயிரம் இடங்களில் 5ஆவது கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

கரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளா்கள் டிச.31ஆம் தேதி வரை தொடா்ந்து பணிபுரியலாம். அதன் பின்னா் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com