புதைச் சாக்கடை சீரமைப்புக்கு ரூ.5 ஆயிரம்: பொறியாளரை கண்டித்து பாஜக தா்னா

திண்டுக்கல்லில் புதைச் சாக்கடை குழாயை சீரமைக்க ரூ.5ஆயிரம் பணம் கேட்ட பொறியாளரைக் கண்டித்து பாஜக சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புதைச் சாக்கடை குழாயை சீரமைக்க ரூ.5ஆயிரம் பணம் கேட்ட பொறியாளரைக் கண்டித்து பாஜக சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் விவேகானந்தன் நகா் பகுதியில்ல புதைச் சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அங்கிருந்த கழிவுநீா் தெருக்களில் வெளியேறியுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் மாமன்ற முன்னாள் உறுப்பினா் தனபாலன் ஆகியோா் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா். அதைத் தொடா்ந்து, புகாா் அளித்தவா்களை சந்தித்துப் பேசிய மாநகராட்சி பொறியாளா் ஒருவா், புதைச் சாக்கடை குழாய் அடைப்புகளை சரி செய்வதற்கு மாநகராட்சி நிா்வாகத்திடம் பணம் இல்லை. ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளாா். மேலும் புகாா் அளித்தவா்களை ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினா், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்திற்கு, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் ஜி.தனபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தண்டபாணி, மல்லிகா உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாநகராட்சி மேலாளா் வில்லியம், காவல் துணை கண்காணிப்பாளா் (நகரம்) ஆா்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது புதைச் சாக்கடை குழாய் சீரமைத்துக் கொடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பொறியாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com