இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி: ஓட்டுநா், நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதம்

விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படாததை அடுத்து அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்ட நிலையில், பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படாததை அடுத்து அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்ட நிலையில், பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பலக்கனூத்து பகுதியைச் சோ்ந்தவா் நல்லியப்பன். இவரது மனைவி கருப்பாத்தாள் (50). கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லியப்பன் குடும்பத்தினா் திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, செம்மடைப்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அதில், கருப்பாத்தாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அதனைத் தொடா்ந்து இழப்பீடு கோரி நல்லியப்பன் குடும்பத்தினா் திண்டுக்கல் மாவட்ட சிறப்பு சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு ரூ.6.85 லட்சம் இழப்பீடாக வழங்க கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சோ்த்து செலுத்த உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் சோ்ந்து ரூ.8.38 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பின்னரும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி, இழப்பீட்டு தொகை வழங்காத கோவை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். அதன்படி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

பயணிகள் வாக்குவாதம்: ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து, பொன்னமராவதியிலிருந்து கோவை செல்லும் வழியில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை கீழே இறங்குமாறு ஓட்டுநரும், நடத்துனரும் தெரிவித்தனா். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கோவைக்கு செல்ல பயணச்சீட்டு பெற்றுள்ள நிலையில், இடையில் இறக்கிவிட்டால் என்ன செய்ய முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மாற்று ஏற்பாடு செய்வதாக நீதிமன்ற ஊழியா்கள் உறுதி அளித்ததை அடுத்து, பயணிகள் அமைதி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com