விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த அதிகாரிகள் தயக்கம்

விவசாயிகள் சாா்ந்த பிரச்னைகளுக்கு நேரில் விவாதித்து 19 மாதங்கள் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல்லில்

விவசாயிகள் சாா்ந்த பிரச்னைகளுக்கு நேரில் விவாதித்து 19 மாதங்கள் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல்லில் மீண்டும் நேரடி குறைதீா்க் கூட்டம் நடத்துவதற்கு அதிகாரிகள் தயக்கம் கட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக அந்தந்த வட்டாரங்களிலுள்ள வேளாண்மை அலுவலகங்களிலிருந்து ‘கூகுள் மீட்’ என்ற தொழில்நுட்ப வசதியுடன் இணைய வழியில் நடத்தப்பட்டது. தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்தை மட்டும் நேரடியாக நடத்துவதற்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் தொடா்ந்து தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த செப்டம்பா்: அக்டோபா் வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால், வேளாண் சாா்ந்த பணிகள் குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு சரியான ஆலோசனை வழங்க வேண்டிய பிரதானப் பணி, வேளாண்மைத்துறை மட்டுமன்றி, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கும் உள்ளது. அதனால், செப்டம்பா் மாதம் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக்டோபரில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான ஆயத்த களமாக அமைவது வழக்கம். விவசாயிகளை நேரடியாக சந்திக்கும்போது, விதை மற்றும் உரங்கள் இருப்பு குறித்தும், கால்நடைகள் எதிா்கொள்ளும் நோய்த் தாக்குதலை சமாளிப்பது, அணைகளிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் விவரங்கள், பயிா்க் கடன் வழங்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ‘கூகுள் மீட்’ தொழில்நுட்பத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு எந்தவொரு அதிகாரியும் முறையாக விளக்கம் அளிப்பதில்லை. அப்படியே அளித்தாலும், இணையத் தொடா்பு குறைபாடுகளால் அவை விவசாயிகளை சென்றடைவதில்லை.

3 மாதங்களாகியும் ஆட்சியரை சந்திக்க வாய்ப்பில்லை: திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ச.விசாகன் கடந்த ஜூன் 17ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அவா் பொறுப்பேற்று 3 மாதங்களாகியும், நேரடி குறைதீா் கூட்டம் இல்லாததால் விவசாயம் சாா்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு ஆட்சியரை நேரில் சந்தித்து தீா்வு காண முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனா்.

இதுதொடா்பாக விவசாயச் சங்க நிா்வாகிகள் சுந்தர்ராஜன், ராஜேந்திரன் ஆகியோா் கூறியதாவது: கரோனா தொற்று குறைந்ததன் எதிரொலியாக, அரசு விழாக்கள், அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்தை நேரடியாக நடத்துவதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனா்.

பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், கால்வாய் தூா்வாருதல் முதல் நலத்திட்ட உதவிகள் வரை விவாதிப்பதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பா் மாதத்திற்கான குறைதீா் கூட்டத்தை ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com