திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை 2 வாரத்தில் முடிக்க உத்தரவு

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ள நிலையில், 2 வார காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் முகப்புத் தோற்றம்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் முகப்புத் தோற்றம்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ள நிலையில், 2 வார காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என ஆய்வு செய்த உயா் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2020 மாா்ச் மாதம் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. ரூ.328 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, மாணவா் விடுதி உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல்லில் பணிகள் தொடங்கப்பட்ட அதே காலக்கட்டத்தில் விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த மாவட்டங்களில் மட்டுமன்றி அதற்கு பின்னா் தொடங்கப்பட்ட கிருஷ்ணகிரி, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், திண்டுக்கல்லில் மட்டும் மந்தமாக பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே 2021-22 கல்வி ஆண்டில், தமிழகத்தில் புதிததாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, புதிய மருத்துவக் கல்லூரிகளில், தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் மட்டுமன்றி, தேசிய மருத்துவக் கழக அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனா். அந்த வகையில் திண்டுக்கல்லில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட தேசிய மருத்துவக் கழக அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் பணிகளில் திருப்தி அடைந்துள்ளனா். அதே நேரத்தில், மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை 2 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்திச் சென்றுள்ளனா்.

இந்நிலையில், தமிழக மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ரூ.127 கோடி செலவில் 6 தளங்களாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி நிா்வாக கட்டடத்திற்கான பணிகள் முடிவடையாமல் உள்ளன. அந்த கட்டடத்தில் குறைந்தபட்சம் தரைத் தளம், முதல் மற்றும் 2ஆவது தளம் என 3 தளங்களுக்கான பணிகளை மட்டுமாவது 2 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளனா். ஆனாலும், 2 வார காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் நிறைவுறுமா என்பது மருத்துவத்துறை அதிகாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com