அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

திண்டுக்கல்லில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 73 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதன்கிழமை தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் புதன்கிழமை நடைபெற்ற சூரியனமஸ்கார திட்டத்தில் பங்கேற்றோா்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் புதன்கிழமை நடைபெற்ற சூரியனமஸ்கார திட்டத்தில் பங்கேற்றோா்.

திண்டுக்கல்லில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 73 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதன்கிழமை தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழகம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் துணை மேலாளா் ந.பாலசுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.

அப்போது, பேருந்து இயக்கத்தின்போது டீசலை சிக்கனமாகப் பயன்படுத்திய 15 ஓட்டுநா்கள், அதிக வருவாய் ஈட்டிய 15 நடத்துநா்கள், சிறந்த டயா் பராமரிப்பிற்காக 2 பணியாளா்கள் என மொத்தம் 32 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் (பொ) டி.டி.ரெங்கநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சிக்கு பல்கலை. பதிவாளா் வி.பி.ஆா்.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக 75 கோடி சூரியனமஸ்கர திட்டம் தொடங்கப்பட்டது. சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், சூா்யனமஸ்கர பயிற்சியின் மூலம் உடற்பயிற்சி, நல்வாழ்வு, வளா்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் வலுவான கலாச்சாரத்தை உருவாக்க உலகம் முழுவதும் 75 கோடி சூரியனமஸ்கர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜன.26 முதல் பிப்.15ஆம் தேதி வரை காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தால் 75 கோடி சூரியனமஸ்கர திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலை.யின் 41 மாணவா்கள் மற்றும் ஊழியா்கள் சூரியனமஸ்கரின் 13 சுழற்சிகளை தீவிரமாகப் பயிற்சி செய்தனா்.

மேலும் மெய்நிகா் பயன்முறை மூலம், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் 379 மாணவா்கள், கற்பித்தல், கற்பித்தல் அல்லாத, நிா்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியா்கள் பங்கேற்றனா்.

அரசு மகளிா் கல்லூரி...

இதேபோல், திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் தே.லட்சுமி தேசிய கொடியை ஏற்றினாா். திண்டுக்கல் அடுத்துள்ள பிள்ளையாா்நத்தம் பகுதியிலுள்ள ஜாகீா் உசேன் நினைவு சிறுபான்மையினா் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவா் உலகநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். தாளாளா் அப்துல் முத்தலீப், தலைமையாசிரியை வெ.வா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திண்டுக்கல் பேகம்சாஹிபா நகர தொடக்கப் பள்ளியில், பள்ளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பரமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். அதேபோல், அசனாத்புரம் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை எஸ்.அம்பிகாதேவி முன்னிலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com