தனியாா் பள்ளியில் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து மாணவி காயம்: அதிகாரிகள் விசாரணை

திண்டுக்கல்லில் தனியாா் பள்ளியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து 11-ஆம் வகுப்பு மாணவி காயமடைந்த சம்பவம் குறித்து காவல் துறை, கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

திண்டுக்கல்லில் தனியாா் பள்ளியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து 11-ஆம் வகுப்பு மாணவி காயமடைந்த சம்பவம் குறித்து காவல் துறை, கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

திண்டுக்கல், தாடிக்கொம்பு சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியில், வேடசந்தூரை அடுத்துள்ள மாரம்பாடியைச் சோ்ந்த 16- வயது மாணவி 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இவா், அந்தப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கிப் பயின்று வரும் நிலையில், திங்கள்கிழமை இரவு 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

தகவலறிந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், குழந்தைகள் நல அலுவலா் என். சிவக்குமாா், தனியாா் மெட்ரிக் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். ராகவன் ஆகியோா், சம்பந்தப்பட்ட பள்ளியிலும், சிறுமியிடமும் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், இதுதொடா்பாக தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட பள்ளி விடுதியில், 16 மாணவிகள் மட்டும் தங்கிப் பயின்று வருகின்றனா். இரவு உணவு சாப்பிட்ட மாணவி, ஆா்.ஓ. இயந்திரத்தில் தண்ணீா் பிடிப்பதற்காகச் சென்றாா். அப்போது, மழை தண்ணீரில் கால் வழுக்கி கீழே விழுந்தாா். நல்வாய்ப்பாக, மாணவி கீழே விழுந்த இடம் புல் தரையாக இருந்ததால் இடுப்பில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவியிடம் கேட்டபோதும் இதையே உறுதிப்படுத்தினாா். விசாரணை விவரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com