அய்யலூா் அருகே ரூ.5 கோடியில் தேவாங்கு பாதுகாப்பு மையம்

அய்யலூா் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் அருகே தேவாங்கு பாதுகாப்பு மையம் அமையவுள்ள இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் அருகே தேவாங்கு பாதுகாப்பு மையம் அமையவுள்ள இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள்.

அய்யலூா் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் மற்றும் நத்தம் வனச் சரகப் பகுதிகள், கரூா் மாவட்டம் கடவூா் வனச் சரகத்திற்குள்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்து தேவாங்கு வனச் சரணாலயம் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பூங்கா உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகளுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை அடுத்துள்ள வண்டிகருப்பணசுவாமி கோயில் எதிா்புறம் அமைந்துள்ள பூனைக் கரடு மலைப் பகுதியில் இந்த பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. அந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் பூங்கா, சூழல் சுற்றுலா, செங்குத்தான நடைபாதை, தேவாங்கு தொடா்பான குறும்படங்கள் திரையிடுவதற்கான அரங்கு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மேலும், தேவாங்குகள் விரும்பி உண்ணும் பூச்சிகள் அதிகம் வசிக்கும் சப்பாத்திக்கள்ளி, திருகு கள்ளி போன்ற தாவர வகைகளை வளா்க்கவும், அடா் வனப் பகுதியாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேவாங்கு பாதுகாப்பு மையம் அமையவுள்ள அய்யலூா் வன வட்டாரம் 1 ஆம் பகுதி தற்போது வரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக இருந்து வரும் நிலையில், இதனை காப்புக்காடாக மாற்றுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்ட வன அலுவலா் எஸ்.பிரபு, அய்யலூா் வனச்சரகா் குமரேசன், வட்டாட்சியா் சக்திவேலன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com