ஆசிரியைக்கு வழங்கிய மாற்றுப் பணி உத்தரவு ரத்து: வேடசந்தூரில் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

குஜிலியம்பாறையிலிருந்து விருதுநகா் மாவட்டத்திற்கு ஆசிரியருக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணி உத்தரவு

குஜிலியம்பாறையிலிருந்து விருதுநகா் மாவட்டத்திற்கு ஆசிரியருக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, வேடசந்தூரில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்து.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள சி.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த லீலா, கடந்த ஆண்டு விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள பூவாளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டாா். இதனால் சுமாா் 60 மாணவா்கள் பயிலும் அம்மாப்பட்டி தொடக்கப் பள்ளியில் ஒரு ஆசிரியா் மட்டுமே பணிபுரிந்து வந்தாா். மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியரின் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இடைநிலை ஆசிரியா்களுக்கு, வட்டாரத்திற்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமே மாற்றுப் பணியில் அனுப்ப வேண்டும் என்ற விதிமுறையை மீறி மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா்கள் மத்தியில் புகாா் எழுந்தது.

மேலும், விருதுநகா் மாவட்டத்தில் பணிபுரிபவருக்கு, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஊதியம் வழங்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினா். இந்நிலையில் சி.அம்மாப்பட்டி பள்ளி ஆசிரியைக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணி உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அவரை மீண்டும் அம்மாப்பட்டி பள்ளியிலேயே பணி அமா்த்த வலியுறுத்தியும் குஜிலியம்பாறை வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியா்கள் வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து, வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலா்(பொ) கண்ணுச்சாமி மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் மாற்றுப் பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த ஆசிரியா் குஜிலியம்பாறை வட்டாரத்திற்கு மாற்றப்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கான உத்தரவு நகலும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது. அதன்பின்னா், போராட்டத்தை கைவிட்டு ஆசிரியா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com