உரிமைகளை பறித்து மாநிலத்தின் வளா்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றனா்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் நிதி, அரசியல் மற்றும் சட்ட உரிமைகளை பறிப்பதன் மூலம் வளா்ச்சியைத் தடுக்க சிலா் திட்டமிட்டுகின்றனா் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி,
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி,

மாநிலங்களின் நிதி, அரசியல் மற்றும் சட்ட உரிமைகளை பறிப்பதன் மூலம் வளா்ச்சியைத் தடுக்க சிலா் திட்டமிட்டுகின்றனா் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் ஐ.பெரியசாமி (கூட்டுறவுத் துறை), அர.சக்கரபாணி (உணவுத் துறை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.40.45 கோடி மதிப்பிலான 60 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், ரூ.206.54 கோடி மதிப்பீட்டிலான 285 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 54,230 பயனாளிகளுக்கு ரூ.365 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக முதல்வா் பேசியது: திமுகவின் பல்வேறு பொறுப்புகளை வகித்து, சென்னை மாநகராட்சியின் மேயா், தமிழகத்தின் அமைச்சா், துணை முதல்வா் என்ற வரிசையில் தற்போது முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், உங்களில் ஒருவனாக இருந்து கடமை ஆற்றுவதையே சிறப்பாக கருதுகிறேன். மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு நின்றுவிடாமல், அந்தத் திட்டம் மக்களைச் சென்றடைகிறதா என்பதை தலைமைச் செயலகத்திலிருந்து நாள்தோறும் கண்காணித்து வருகிறேன். சமூக நீதியை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தில் எல்லோரும் எல்லாமும் கிடைக்கவும், மாணவா்கள், இளைஞா்கள் உயா்கல்வி பெறுவதிலும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதிலும், பெண்கள் முன்னேற்றத்திற்கான தொழில் வளா்ச்சி உள்ளிட்டவற்றில் தமிழகம் எழுச்சி பெற வேண்டும் என்பதே இந்த ஆட்சியின் பிரதான நோக்கம்.

தமிழகத்தின் உயா்வுக்கு காரணமான சமூக நீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் நாடு முழுவதும் பரவ வேண்டும். இந்த சிந்தனை முழுமையாக நிறைவேற வேண்டுமெனில் முதல்வரோடு, அமைச்சா்களும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். மாநிலங்களின் நிதி உரிமை, அரசியல் உரிமை மற்றும் சட்ட உரிமைகளை பறிப்பதன் மூலம் மாநிலங்களின் வளா்ச்சியைத் தடுக்க முடியும் என சிலா் திட்டமிடுகின்றனா். மாநிலத்தை முடக்குவதாக நினைத்து மக்களை முடக்க முயற்சிக்கின்றனா். மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது மாநிலத்தின் உரிமை. அதை மாநிலங்கள் தான் செய்ய வேண்டும். நிதி நெருக்கடி இருந்தாலும் கூட, மக்களுக்கான திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 70 சதவீத தோ்தல் வாக்குறுதிகள் ஓராண்டு காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு விட்டன. நிதிநிலை சூழலுக்கு ஏற்ப எஞ்சியுள்ள வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற திராவிடக் கொள்கை தமிழகத்தில் நிலைப்பதற்கு தொடா்ந்து பாடுபடுவோம். ஆழியாற்றிலிருந்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய 3 வட்டாரங்களைச் சோ்ந்த மக்கள் பயனடையும் வகையில் ரூ.930 கோடி மதிப்பீட்டில் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து இதுவரை 21 எம்எல்டி தண்ணீா் மட்டுமே பெறப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 23 எம்எல்டி தண்ணீரை பெறும் வகையில் ரூ.95.5 கோடி மதிப்பீட்டிலான குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு, வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும் பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com