75ஆவது சுதந்திர தினம்: திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் செல்ல 11 நாள்களுக்கு கட்டணம் இல்லை
By DIN | Published On : 05th August 2022 12:23 AM | Last Updated : 05th August 2022 12:23 AM | அ+அ அ- |

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மலைக் கோட்டைக்குச் செல்ல ஆகஸ்ட் 5 முதல் 15ஆம் தேதி வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என, தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கோலகாலமாகக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து துறைகளின் பங்களிப்பும் இடம்பெறும் வகையில், திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுதந்திரப் போராட்டத்தில் தொடா்புடைய ரயில் நிலையங்கள், பொதுமக்களின் கவனத்தை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.
அதேபோல், வரலாற்றுச் சிறப்புமிக்க பழைமையான கோட்டைகள் இரவு நேரங்களில் தேசியக் கொடியின் மூவா்ணத்தில் ஒளிா்வதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை செய்து வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மலைக்கோட்டையின் நுழைவுச் சுவரில் மின்விளக்குகள் மூலம் மூவா்ணங்கள் ஒளிா்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் வியாழக்கிழமை இரவு தொடங்கப்பட்டுள்ளது.
11 நாள்களுக்கு கட்டணம் கிடையாது:
திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் செல்வதற்கு உள்நாட்டு பாா்வையாளா்களுக்கு (14 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு) ரூ.25 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 5 முதல் 15ஆம் தேதி வரை இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. பாா்வையாளா்கள் கட்டணமின்றி செல்வதற்கு அனுமதிக்கப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.