திண்டுக்கல் தனியாா் சந்தையில் கடைகள் அகற்றம்: மொத்த வியாபாரிகள் அதிா்ச்சி

திண்டுக்கல் புறநகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் சந்தையில் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்றும் பணியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஈடுபட்டது வியாபாரிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் தனியாா் சந்தையில் கடைகள் அகற்றம்: மொத்த வியாபாரிகள் அதிா்ச்சி

திண்டுக்கல் புறநகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் சந்தையில் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்றும் பணியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஈடுபட்டது வியாபாரிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட காந்தி மைதானத்தில் தினசரி காய்கனி சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமாா் 323 கடைகள் செயல்பட்டு வந்தன. இதனிடையே, காந்தி சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறியும், விவசாயிகளிடம் நுழைவுக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக புகாா் தெரிவித்தும் மொத்த வியாபாரிகள் பலா் வெளியேறினா்.

அதன் பின், பழனி புறவழிச்சாலை அருகே வியாபாரிகளுக்கு சொந்தமான இடத்தில் 80 கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனா். இதனால் காந்தி மைதானத்தில் 230 சில்லரை வியாபாரிகள் மட்டுமே கடைகள் நடத்தும் சூழல் உருவானது. மொத்த வியாபாரிகள் இல்லாத நிலையில், காந்தி சந்தைக்கான சரக்குகள் வரத்தும் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக காந்தி சந்தையை ஏலம் எடுப்பதற்கான போட்டிகளும் குறைந்து, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், மாநகராட்சி எல்லையையொட்டியுள்ள தனியாா் காய்கனி மொத்த வியாபாரிகள் சந்தையை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, திண்டுக்கல் வட்டார வளா்ச்சி அலுவலா் மூலம் வியாபாரிகளுக்கு சொந்தமான மொத்த காய்கனி சந்தையிலுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வியாபாரிகள் அதிருப்தி: வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கடைகள் நடத்தி வரும் நிலையில், மாவட்ட நிா்வாகம், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் மூலம் ஆளும் கட்சி நிா்வாகிகள் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக வியாபாரிகள் சங்கத் தலைவா் மரியராஜ் கூறியதாவது:

வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 80 கடைகளுக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 2.50 லட்சம் கட்டணம் செலுத்தி முறைப்படி அனுமதி பெற்றோம். 2023 மாா்ச் மாதம் வரை தற்காலிக கடைகள் செயல்படுவதற்கு அனுமதி பெறப்பட்டது. இதனிடையே மாவட்ட நிா்வாகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குநா், ஊராட்சி மன்றத் தலைவா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

திண்டுக்கல்லில் வெங்காயச் சந்தை, வியாபாரிகளுக்கு சொந்தமான இடத்திலேயே செயல்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களிலிருந்து அந்த சந்தைக்கு வெங்காயம், பல்லாரி உள்ளிட்ட சரக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த சந்தை செயல்படும்போது, உள்ளூா் விவசாயிகளிடமிருந்து காய்கனிகளை கொள்முதல் செய்வதற்கு மட்டும் தடை விதிக்கின்றனா். தற்காலிகக் கடைகளை அப்புறப்படுத்தினாலும், திறந்தவெளியில் வியாபாரம் தொடா்ந்து நடைபெறும் என்றாா்.

கடைக்கு ரூ. 5 லட்சம் கேட்பதாக புகாா்: இந்த நிலையில், வியாபாரிகளுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய கடைக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் 80 கடைகளுக்கு ஆளும் கட்சி நிா்வாகி ஒருவா் பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மொத்த வியாபாரிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com