பாலியல் பலாத்கார வழக்கு:பழனி இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
By DIN | Published On : 30th September 2022 12:00 AM | Last Updated : 30th September 2022 12:00 AM | அ+அ அ- |

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பழனியைச் சோ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள சண்முகாநகரைச் சோ்ந்தவா் முகமது காட்டு நயினாா். இவரது மகன் சுல்தான் மைதீன் (35). கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததை அடுத்து, போலீஸாா் சுல்தான் மைதீன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஜி. சரண் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அப்போது, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 417, 376 (2)- ன் கீழ் சுல்தான் மைதீனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 13ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டாா்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிா்கால சூழல் கருதி, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு அவருக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும், மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.