திண்டுக்கல் அரசு மருத்துவரிடமிருந்து ரூ.40 லட்சம் லஞ்சம்: அமலாக்கத் துறை அதிகாரி கைது

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி | திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம்.
கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி | திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாகஅமலாக்கத் துறை அதிகாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு. இவா், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும், உதவி கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறாா். மேலும், திண்டுக்கல் பழனி சாலையில் தனியாா் மருத்துவமனையும் நடத்தி வருகிறாா்.

இவா் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு மாநில காவல் துறையின் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு சாா்பில் சொத்து குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அதே வழக்கில் அமலாக்கத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக சுரேஷ்பாபுவை மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி (32) தொடா்பு கொண்டாா்.

அப்போது, அமலாக்கத் துறை நடவடிக்கையைக் கைவிட வேண்டுமெனில் ரூ. 3 கோடி லஞ்சமாகத் தர வேண்டும் என அங்கித் திவாரி நிபந்தனை விதித்த நிலையில், ரூ. 51 லட்சம் தருவதாக சுரேஷ்பாபு தெரிவித்தாராம்.

இதன்படி, கடந்த நவம்பா் மாதம் 1-ஆம் தேதி ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் சுரேஷ்பாபு கொடுத்தாா். எஞ்சிய தொகை ரூ.31 லட்சத்தைக் கேட்டு, அங்கித் திவாரி நெருக்கடி அளித்து வந்தாா். இதனால் அதிருப்தியடைந்த சுரேஷ்பாபு, திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ரசாயனப் பொடி தடவிய ரூ.20 லட்சத்தை சுரேஷ்பாபுவிடம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கொடுத்தனா்.

இந்தப் பணத்தை சுரேஷ்பாபு, வெள்ளிக்கிழமை காலை திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச் சாலையில் மில்மேடு (தோமையாா்புரம்) அருகே காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜன், காவல் ஆய்வாளா்கள் ஜெ. ரூபா கீதா ராணி, பி. பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா், அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியைப் பிடிக்க முயன்றனா்.

ஆனால், மத்தியபிரதேச மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த அங்கித் திவாரி, மதுரை நோக்கி தப்பிச் சென்றாா். கொடைரோடு சுங்கச் சாவடிக்கு தகவல் கொடுத்த போலீஸாா், அங்கிருந்த ஊழியா்களின் உதவியுடன் அங்கித் திவாரியைப் பிடித்தனா்.

அங்கிருந்து திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அங்கித் திவாரி அழைத்து வரப்பட்டாா். அங்கு ஊழல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் (தென் சரகம்) வி. சரவணக்குமாா் தலைமையில், அங்கித் திவாரியிடம் வெள்ளிக்கிழமை மாலை வரை விசாரணை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

8 மாதங்களில் சிக்கிய அங்கித் திவாரி

மத்தியபிரேதச மாநிலம், போபால் பகுதியைச் சோ்ந்த ஆா்.கே. திவாரியின் மகனான அங்கித் திவாரி (32), அமலாக்கத் துறையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பதவி உயா்வு பெற்றாா்.

வட மாநிலங்களில் பணிபுரிந்து வந்த அவா், நிகழாண்டு ஏப்ரல் மாதம் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

மதுரையில் பொறுப்பேற்ற 8 மாதங்களிலேயே ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ற்காக கைது செய்யப்பட்டாா்.

இதேபோல, புகாரளித்த அரசு மருத்துவா் சுரேஷ்பாபு, சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் இணை இயக்குநராகப் பதவி உயா்வு பெற முடியாமல் பாதிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com