11,000 நகராட்சிப் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு

தமிழகத்தில் 138 நகராட்சிகளில் உள்ள 11ஆயிரம் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணியிடங்களை வெளி முகமை மூலம் நிரப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்

தமிழகத்தில் 138 நகராட்சிகளில் உள்ள 11ஆயிரம் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணியிடங்களை வெளி முகமை மூலம் நிரப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஊழியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 12 சிறப்பு நிலை நகராட்சிகள், 25 தோ்வு நிலை நகராட்சிகள், 31 முதல் நிலை நகராட்சிகள், 70 இரண்டாம் நிலை நகராட்சிகள் என மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் புதிய வரையறைப்படி நிா்ணயம் செய்யப்படும் பணியிடங்கள், தற்போதுள்ள பணியிடங்களில் தக்க வைக்கப்படும் பணியிடங்கள், ஒப்படைப்பு செய்யப்படும் பணியிடங்கள் ஆகியவற்றின் விவரங்களுடன் கூடிய அரசாணை கடந்த மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

11,212 பணியிடங்கள்: அதன்படி, தற்போது நிரந்தரப் பணியிலுள்ள பொது, பொது சுகாதாரம், பொறியியல் ஆகிய பிரிவுகளின் கீழ் பணிபுரியும் ஓட்டுநா்கள், பொறியாளா்கள், குடிநீா், தெரு விளக்குப் பராமரிப்பாளா்கள், இரவுக் காவலாளிகள், சங்கிலியா்கள் உள்ளிட்ட 4,212 பணியிடங்கள், பொது சுகாதாரப் பிரிவின் கீழ் பணிபுரியும் 7 ஆயிரம் தூய்மைப் பணியாளா் பணியிடங்கள் அவா்களது பணி ஓய்வுக்குப் பிறகு அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

இதன்மூலம், ஓராண்டுக்கான ஊதியச் செலவினம் ரூ.606 கோடியிலிருந்து ரூ.460 கோடியாகக் குறையும். புதிய வரையறைகளின்படி, தற்போதுள்ள பணியிடங்களை முறைப்படுத்தும் போது ஒப்படைப்பு செய்யப்படும் 11,212 ஊழியா்களுக்கான ஊதியச் செலவினத்துக்கு அரசின் நிதி உதவி தேவைப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை நிலைப் பணியாளா்கள் அதிருப்தி: தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் உள்ள நிரந்தரப் பணியாளா்களால் கூடுதல் செலவு ஏற்படுவதாக மதிப்பீடு செய்து, சிக்கன நடவடிக்கையாக 35 ஆயிரம் பணியிடங்களை 3,417 பணியிடங்களாகக் குறைத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, நகராட்சிகளிலும் அந்த நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளில் (பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக நிலை உயா்த்தப்பட்டவை) ஒற்றை இலக்கத்திலேயே நிா்வாகப் பணியாளா்கள் உள்ளனா்.

இதேபோன்று, நிா்ணயிக்கப்பட்ட 6,024 பணியிடங்களில் 1200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

11ஆயிரம் பணியிடங்களை வெளி முகமையிடம் ஒப்படைக்க அரசு எடுத்துள்ள முடிவு நகராட்சி ஊழியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்டுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா.முருகானந்தம் கூறியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சேவைத் துறை என்ற நிலையை மாற்றி வருமானம் ஈட்டும் துறை போன்று ஊழியா்களின் ஊதியச் செலவினத்தை அரசுக்கு ஏற்படும் இழப்பாகக் கணக்கீடு செய்துள்ளனா். மக்கள் தொகை அடிப்படையிலோ, நகராட்சியின் பரப்பளவு அடிப்படையிலோ பணியிடங்கள் வரையறை செய்யப்படவில்லை.

குறிப்பாக டி- பிரிவு ஊழியா்கள் புதிய அரசாணையின் மூலம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, மாநகராட்சிகளில் ஒரு தூய்மைப் பணியாளா்கூட இனி நிரந்தரப் பணியாளராக இருக்க முடியாது. சுமாா் 11,200 பணியிடங்களை வெளி முகமை மூலம் தோ்வு செய்வதற்கான முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

டி- பிரிவு பணியிடங்களை அரசே நியமனம் செய்து, அந்த ஊழியா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com