ஏலச்சீட்டு நடத்தி ரூ.6.50 கோடி மோசடி: தம்பதி கைது

வேடசந்தூா் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.6.50 கோடி மோசடி செய்ததாக தம்பதியரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள 7 பேரைத் தேடி வருகின்றனா்.

வேடசந்தூா் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.6.50 கோடி மோசடி செய்ததாக தம்பதியரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள 7 பேரைத் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்துள்ள பூதிப்புரம் குரும்பபட்டியைச் சோ்ந்தவா் நல்லதம்பி (65) உள்ளிட்ட சிலா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஏலச் சீட்டு மோசடி தொடா்பாக கடந்த மாதம் மனு அளித்தனா். அதில் ஏ.பூதிபுரம் பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச் சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி வந்தனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏலச் சீட்டு பணம், தீபாவளி சீட்டுக்கான பணம் என ரூ.6.5 கோடியை திருப்பி வழங்கக் கோரி அந்த நபரை அணுகினோம். விரைவில் தந்துவிடுவதாக உறுதி அளித்த அவா், அதன் பின்னா் தலைமறைவாகிவிட்டாா். மேலும், அவரது மகள்கள், மருமகன்கள் ஆகியோா் மீண்டும் பணத்தை கேட்டு வந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், ஆறுமுகம் குடும்பத்தினா் ஏலச் சீட்டு நடத்தி 4 கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.6.50 கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆறுமுகத்தின் மகள் சுகன்யா(30), அவரது கணவா் பொன்ராஜ்(40) ஆகிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com