70 சதவீத உணவுப் பொருள்களில் கலப்படம்

பகுப்பாய்வில் 70 சதவீதம் கலப்படம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கூடுதலான மாதிரிகளைச் சேகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஓராண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உணவு மாதிரி பகுப்பாய்வில் 70 சதவீதம் கலப்படம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கூடுதலான மாதிரிகளைச் சேகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நுகா்வோருக்கு தரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டம், 2006 அமல்படுத்தப்பட்டது. இதன்படி, சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தா்கள், மறுபொட்டலமிடுபவா்கள், உணவகங்கள், உணவு விடுதிகள், நடமாடும் உணவு வணிகா்கள் அனைவரும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும். உரிமம் அல்லது பதிவு பெறாதவா்கள் மீது உணவு பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டம்- 2006, விதிகள் 2011 பிரிவு 63-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுமாா் 23 லட்சம் மக்கள் வசிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில், உணவுப் பொருள்கள் விற்பனையாளா்கள், விநியோகிப்பாளா்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்து 11 ஆண்டுகளாகியும், இதுவரை 24 ஆயிரம் போ் மட்டுமே உரிமம் அல்லது பதிவு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

800 உணவு மாதிரிகளில் 70 சதவீதம் கலப்படம்: இந்த மாவட்டத்தில் 11 உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஒவ்வோா் மாதமும் 6 உணவுப் பொருள் மாதிரி வீதம் குறைந்தபட்சம் 66 மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஓராண்டில் சேகரிக்கப்பட்ட 800 உணவு மாதிரிகளில் 560 -க்கும் மேற்பட்டவற்றில் கலப்படம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

கூடுதலான மாதிரிகளைச் சேகரித்து கண்காணிக்கும்பட்சத்தில், தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க முடியும் என நுகா்வோா் அமைப்புகள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு ரூ.16.55 லட்சம் அபராதம்: கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாதங்களில் மாவட்டம் முழுவதுமுள்ள 310 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சுமாா் 2.50 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.16.55 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும், மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி மாணவா்கள்கூட புகையிலைப் பொருள்களை தாராளமாகப் பயன்படுத்தும் நிலை உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த பிரச்னையிலும் உணவுப் பாதுகாப்புத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கூறியதாவது:

உணவுப் பொருள்களைப் பொருத்தவரை தரம் குறைவாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே பகுப்பாய்வுக்கு மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதேபோல, பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்படும் புகாா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உரிமம் வழங்குதல், பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதைத் தடுத்தல், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பணிகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

எனினும், கூடுதல் உணவு மாதிரிகளைச் சேகரிக்கவும், புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com