3 ஆண்டுகளாக ஏலம் போகாத கட்டடம்: மாநகராட்சிக்கு ரூபாய் ஒரு கோடி வருவாய் இழப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட உணவு விடுதி சுமாா் 3 ஆண்டுகளாக ஏலம் போகாததால், மாநகராட்சிக்கு இதுவரை சுமாா் ரூ.1.08 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயன்பாட்டுக்கு வராத கட்டடம்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயன்பாட்டுக்கு வராத கட்டடம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட உணவு விடுதி சுமாா் 3 ஆண்டுகளாக ஏலம் போகாததால், மாநகராட்சிக்கு இதுவரை சுமாா் ரூ.1.08 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் 164 கடைகள் இயங்கி வருகின்றன. இதுதவிர ரூ.5 கோடி செலவில் 34 கடைகள், ஒரு உணவு விடுதி புதிதாக கட்டப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் முடிவுற்றப் போதிலும், புதிதாக கட்டப்பட்ட 34 கடைகள் நீதிமன்ற வழக்கு காரணமாக திறக்கப்படாமல் உள்ளன. ஆனால் எந்தவித தடையும் இல்லாதபோதிலும், தரைத் தளம், முதல் தளம் என தலா 2500 சதுரடியில் கட்டப்பட்ட உணவு விடுதியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருப்பதால், மாநகராட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 164 கடைகளை ஏலம் எடுத்தவா்களும் வாடகைத் தொகையை செலுத்தாததால் சுமாா் ரூ.2 கோடி நிலுவையில் உள்ளது. இந்த வாடகை பாக்கியை வசூலிக்க, கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், 3 ஆண்டுகளாக ஏலத்தில் விட முடியாமல் முடங்கி கிடக்கும் உணவு விடுதிக்கான கட்டடத்தின் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சுமாா் ரூ.1.08 கோடி வருவாய் இழப்பு: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வெளிப்புறக் காவல் நிலையம் அருகே கட்டப்பட்ட உணவு விடுதிக்கு மாத வாடகையாக (இரு தளங்களையும் சோ்த்து) குறைந்தபட்சம் ரூ.3.50 லட்சம் நிா்ணயிக்கப்பட்டதாகவும், 3 முறை ஏல அறிவிப்பு வெளியிட்டும் ஒப்பந்ததாரா்கள் ஏலம் எடுக்க முன் வரவில்லை என்றும் மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அலுவலா் ஒருவா் தெரிவித்தாா். குறந்தபட்சம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டிருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளில் சுமாா் 1.08 கோடி மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், ஏலத்தில் விடுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் தொடா் நடவடிக்கையில் ஈடுபடாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

பயன்பாட்டுக்கான நோக்கத்தை மாற்ற கோரிக்கை: பேருந்து நிலையத்தைச் சுற்றிலும், 8 பெரிய உணவகங்களும், 40க்கும் மேற்பட்ட சிறிய, சாலையோர உணவங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால், உணவக விடுதிக்கான கட்டடத்தை ஏலம் எடுத்தால் போட்டியை சமாளித்து லாபம் ஈட்ட முடியாது என்பதால் வணிகா்கள் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், உணவக விடுதி என்ற ஒற்றைப் பயன்பாட்டுக்காக மட்டுமே ஏலம் விடுவதைத் தவிா்த்து, அலுவலகப் பயன்பாடு, பல்பொருள் அங்காடி என பல்முனைப் பயன்பாட்டுக்கு, இரு தளங்களையும் தனித் தனியாக ஏலம் விடுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் எதிா்பாா்க்கின்றனா். இதன் மூலம் உடனடியாக அந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு வருவதோடு, மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன் கூறியதாவது: நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தில் உணவக விடுதிக்காகவே அனுமதிப் பெறப்பட்டு, தலா 2500 சதுர அடியில் 2 தளங்களாக இந்த கட்டடம் கட்டப்பட்டது. இதனால், உணவக விடுதி அல்லாத பிற பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட முடியாத சூழல் உள்ளது. இதுவரை ஏலம் எடுப்பதற்கும் யாரும் முன்வராத காரணத்தின் அடிப்படையில், மாமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று வெவ்வேறு பயன்பாட்டுக்கு புதிதாக ஏலம் நடத்தலாம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com