திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16.07 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16.07 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த 16.07 லட்சம் வாக்காளா்கள், தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு 1,812 வாக்குச் சாவடிகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7,80,096 ஆண்கள், 8,26,737 பெண்கள், 218 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 16,07,051 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு வாக்குச் சாவடி வீதம், மகளிா் மட்டும் வாக்களிப்பதற்கான 6 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மகளிா் வாக்குச் சாவடிகள்: பழனி நகராட்சி பாரதி தொடக்கப் பள்ளி, ஒட்டன்சத்திரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூா் தொகுதியில் சின்னாளப்பட்டி தேவாங்கா் மகளிா் உயா்நிலைப் பள்ளி, நிலக்கோட்டை தொகுதியில் சிலுக்குவாா்பட்டி ஆா்சி மேல்நிலைப் பள்ளி, நத்தம் ஆா்சி பதின்ம பள்ளி, திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மகளிா் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா், வாக்குச் சாவடி அலுவலா் நிலை 1, 2, 3 ஆகிய பணியிடங்களில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கின்றனா். இதேபோல, வேட்பாளா் சாா்பில் பெண் முகவா்கள், பாதுகாப்புப் பணிக்கு பெண் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், மகளிா் வாக்குச் சாவடி என்பதை அடையாளப்படுத்தும் வகையில், இளஞ்சிவப்பு வண்ண பலுான் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாதிரி வாக்குச் சாவடிகள்: மாதிரி வாக்குச் சாவடிகளைப் பொருத்தவரை, வாக்காளா்களுக்கு இருக்கை வசதி, பந்தல், கம்பள விரிப்பு, பூ அலங்காரம், தோரணங்கள், மேஜைகளில் அழகிய விரிப்புகள், பூங்கொத்து உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பழனியில் சிவகிரிப்பட்டி ஒன்றிய அலுவலகம், ஒட்டன்சத்திரத்தில் கே.ஆா்.அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூரில் கரிசல்பட்டி திரு இருதய தொடக்கப் பள்ளி, நிலக்கோட்டையில் வத்தலண்டு மகாலட்சுமி மகளிா் மேல்நிலைப் பள்ளி, நத்தத்தில் வேலம்பட்டி லாண்டிஸ் பதின்ம பள்ளி, திண்டுக்கல்லில் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு: திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 1,812 வாக்குச் சாவடிகளுக்கும், அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி தலைமையிடத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகள், வாக்குச் சாவடிக்கு தேவையான படிவங்கள், அழியாத மை, மெழுகுவா்த்தி உள்ளிட்ட 131 பொருள்கள் அடங்கிய பைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com