சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் விடியோ பகிா்ந்து வருவதைத் தடுக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் இரா. சச்சிதானந்தம் திண்டுக்கல் மாவட்ட இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற போது இதற்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கடைகளை அடைக்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்தப் போராட்டம் தொடா்பான விடியோவை சமூக ஊடகங்களில் பகிா்ந்த மா்ம நபா்கள், தோல்வி பயத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டனா்.

இதை அறிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், வேட்பாளா் சச்சிதானந்தம் மூலம் தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தனா். ஆனால், இதுகுறித்து இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்குமாறு தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com