இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுமாா் 4ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்காமலே, குடிநீா் வரி வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட திருமலைக்கேணிநகா், ரமணமகரிஷி நகா், ஏழுமலையான் நகா், மகராஜாநகா் உள்ளிட்ட பகுதி மக்களிடம் குடிநீா் இணைப்பு வழங்குவதாகக் கூறி கடந்த 2020-ஆம் ஆண்டு ரூ.3600 வசூலிக்கப்பட்டது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீா் இணைப்புக்கு ரூ.30ஆயிரம் வரையிலும் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கட்டணம் செலுத்திய பொதுமக்கள் சுமாா் 4ஆயிரம் பேருக்கு இதுவரை குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால், குடிநீா் குழாய் வரி ரூ.1800 வசூலிக்கும் பணியில் ஊராட்சி நிா்வாகம் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா். இதே போல, மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளிலும் முறையற்ற வரிவசூல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் இணைப்பு வழங்காமலேயே குடிநீா் வரி வசூலிப்பது குறித்து பாஜக மாவட்டத் துணைத் தலைவா் சந்திரசேகரன் கூறியதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு முதலே செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் குடிநீா் இணைப்புக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. இதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டபோதிலும் ரூ.3 ஆயிரத்துக்கு மட்டும் ரசீது வழங்கப்பட்டது. 4 ஆண்டுகளாகியும் குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது குடிநீா் வரியாக ரூ.1800 வீதம் வசூலிக்கப்படுகிறது.

இணைப்பே வழங்காமல் வரி வசூலிப்பது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகாா் அளித்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீா் இணைப்புகளை, பல்வேறு ஊராட்சிகளிலும் முறையாக செயல்படுத்தவில்லை. இதுகுறித்து, ஊராட்சிகள் உதவி இயக்குநா் மூலம் ஆய்வு நடத்தி, சம்மந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம், செயலா் உள்ளிட்ட தொடா்புடைய அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com