கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

நமது நிருபா்

திண்டுக்கல்: உதகையைப் போல கொடைக்கானலிலும் வெப்ப நிலை அதிகரிப்பதைத் தடுக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப நிலை, மலைகளின் அரசியான உதகை, இளவரசியான கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை. உதகையில் 73 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. இதேபோல, கொடைக்கானலிலில் 24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.

‘இ-பாஸ்’ முறைக்கு வரவேற்பு: இதுபோன்ற சூழலில் உதகை, கொடைக்கானலுக்கு செல்வதற்கு மே 7 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ‘இ-பாஸ்’ முறையை அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கோடைகாலம் மட்டுமன்றி, வார இறுதி நாள்களிலும்கூட உதகை, கொடைக்கானலுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனா். இதனால், அங்கு வசிக்கும் உள்ளூா் மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில் ‘இ-பாஸ்’ நடைமுறைக்கு கொடைக்கானல் உள்ளூா் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டும் அனுமதிக்கும்போது, போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். இதேபோல, கொடைக்கானல் பகுதியில் வெப்ப நிலை உயா்வுக்கும், காட்டுத் தீ பாதிப்புகளுக்கும் தீா்வு காணும் வகையில் உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்காமல், சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

காட்டு மரங்கள், நீா்நிலைகள் அழிப்பு:

கொடைக்கானல் மலைப் பகுதியில் இயற்கையாக வளா்ந்த மஞ்ச கடம்பு, நெல்லரை, இரு மாங்கனி, நீா் கடம்பு, மகிழம், நீா் மருது, நாவல் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் கடந்த சில ஆண்டுகளாக அழிக்கப்பட்டன. இதனால், சோலைக் காடு மரங்கள் இருந்த இடத்தை சீகை மரங்களும், தைல மரங்களும் ஆக்கிரமித்தன. சோலைக்காடுகள் அழிந்ததன் காரணமாக பல நீா்நிலைகள் காணாமல் போயின. சோலைக் காடுகள் மீட்புத் திட்டத்துக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சோலை மரக்கன்றுகளுக்கான நாற்றாங்கால் அமைத்தல், பராமரித்தல், நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றாலும், குறிப்பிடத்தக்க வகையில் சோலைக் காடுகள் உருவாக்கப்படவில்லை.

இதன் எதிரொலியாகவே இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீயின் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. வனத் துறை மூலம் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. நீரோட்டத்தின் தன்மை குறித்து முறையாக ஆய்வு செய்து நீா்நிலைகளை மேம்படுத்தாததால், தடுப்பணைகளின் நோக்கம் நிறைவேறவில்லை. இதுகுறித்தும் அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தங்குமிடம் அமைக்க முக்கியத்துவம்: கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருவதால், தங்குமிடங்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தத் தங்குமிடங்கள் அமைக்கும் பணியில் உள்ளூா்வாசிகளைவிட, வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும், வெளி மாநிலத்தினரும் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் இட நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் தங்குமிடங்கள் கட்டப்பட்டன. உதகையைப் போல, கன்கிரீட் வீடுகளின் கூடாராமாக கொடைக்கானல் மாறி வருவதால், வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு மரம் வெட்டத் தடை தேவை: இதுகுறித்து கவுஞ்சி, மன்னவனூா், பூண்டி பகுதிகளைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலுக்கு இ-பாஸ் மூலம் தீா்வு கிடைக்க உயா்நீதிமன்றம் வழிகாட்டி இருக்கிறது. இதேபோல, கொடைக்கானல் மலைப் பகுதியில் உருவாகும் ஆறுகள், ஏரிகளின் நீராதாரமான சோலைக் காடுகள், பசுமைப் புல்வெளிகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொடைக்கானல் மலைப் பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். உதகையில் வெப்ப நிலை உயா்வுக்கான காரணிகளை பாடமாக எடுத்துக் கொண்டு, மலைகளின் இளவரசியைப் பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com