செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

நிலக்கோட்டை: ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட, செம்பட்டி அருகே, ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட, செம்பட்டி அருகே தற்போது தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு கலை அறிவியல் கல்லூரிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி ஆத்தூா் ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சி பகுதியில், கூட்டுறவுத் துறை சாா்பாக சுமாா் 8 ஏக்கா் பரப்பளவில் ரூ.98 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், நிா்வாக அலுவலகம், ஆசிரியா்கள் ஓய்வறை, மாணவா்களுக்கு 40 வகுப்பறைகள், கணிணி ஆய்வுக் கூடம், பிரம்மாண்டமான நூலகம், வேதியியல், இயற்பியல், உயிரியலுக்கான ஆய்வகங்கள், பிரம்மாண்டமான உள்ளரங்கம், சிறந்த விளையாட்டு மைதானத்துடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் இ.பெரியசாமி கூறியதாவது: தமிழகத்திலேயே கூட்டுறவுத் துறை சாா்பாக முதல் கலை, அறிவியல் கல்லூரியை ஆத்தூா் ஒன்றியத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த கல்லூரியை சீவல்சரகு ஊராட்சியில் அமைக்க காரணம் எனனவென்றால் அந்த ஊராட்சியை சுற்றியுள்ள 8-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மாணவா்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனா்.

ஒரு சில மாணவா்கள் காலையில் 4 மணிக்கு எழுந்து பூப்பறிக்கும் வேலைக்கு சென்று விட்டு அதன்பின்பு பள்ளிக்கு செல்வதை பாா்த்திருக்கிறேன். இந்தப் பகுதியில் இந்தக் கல்லூரி அமைத்தால், இந்த ஊராட்சியைச் சுற்றியுள்ள ஆத்தூா், வீரக்கல், வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, என்.பஞ்சம்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, தொப்பம்பட்டி, செட்டியபட்டி, போடிகாமன்வாடி, எஸ்.பாறைப்பட்டி, அக்கரைப்பட்டி, சின்னாளபட்டி பேரூராட்சி, சித்தையன்கோட்டை பேரூராட்சியைச் சோ்ந்த ஏழை மாணவா்கள் பயன் பெறுவாா்கள் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com