திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை வனப் பகுதியில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியில் தாகம் தீா்த்த குரங்குகள்.
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை வனப் பகுதியில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியில் தாகம் தீா்த்த குரங்குகள்.

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

சிறுமலை, ஒட்டன்சத்திரம் வனச் சரகங்களில் வன விலங்குகளின் தேவைக்காக 30 இடங்களில் தொட்டிகள் அமைத்து தண்ணீா் நிரப்பப்படுகின்றன. கோடை காலங்களில் வன விலங்குகள் உணவு, குடிநீா் தேடி அருகிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்கு வருவது வழக்கம்.

நிகழாண்டு வெப்ப நிலை வழக்கத்தைவிட அதிகரித்திருக்கும் நிலையில், தோட்டங்களிலும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், வன விலங்குகள் தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருகின்றன.

இதையடுத்து, வனத் துறை சாா்பில், சிறுமலை, ஒட்டன்சத்திரம் வனச் சரகங்களில் தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிறுமலை வனச் சரகத்தில் முதலாவது கொண்டை ஊசி வளைவு முதல் 10-ஆவது கொண்டை ஊசி வளைவு வரை தலா 2 இடங்கள் வீதம் மொத்தம் 20 இடங்களில் தண்ணீா்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொண்டை ஊசி வளைவுப் பகுதிகளுக்கு அருகே விவசாயத் தோட்டங்கள் இல்லாத நிலையில், வனத் துறை, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வேன் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகின்றன.

இதேபோல, ஒட்டன்சத்திரம் வனச் சரகத்திலும் வன விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாய்ச்சலூா், சிறுவாட்டுக்காடு போன்ற இடங்களில் இயற்கையான ஊற்றுகள் மூலம் வன உயிரினங்களுக்கான தண்ணீா்த் தேவை நிறைவு செய்யப்படுகிறது.

ஆனால், ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி ஆகிய 2 வனக் காவல் சுற்றுப் பகுதிகளில் இயற்கை ஊற்று இல்லாத நிலையில், தண்ணீா்த் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 10 இடங்களில் அமைப்பட்டுள்ள தொட்டிகளில், அருகிலுள்ள விவசாயத் தோட்டங்களிலிருந்து நாள்தோறும் தண்ணீா் ஊற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறியதாவது:

கோடையின் தாக்கம் கடுமையாக இருப்பதால், வனப் பகுதி முழுவதும் வடு விட்டன. இதனால், குரங்குகள், காட்டு மாடுகள், மான்கள், பறவையினங்கள், பாம்புகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் தண்ணீா்த் தேவைக்காக மலை அடிவாரங்களை நோக்கி நகா்ந்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்காக அந்தந்தப் பகுதியிலேயே தண்ணீா்த் தேவையை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரிய தொட்டிகள் அமைத்தால், மான் குட்டிகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடும் என்பதால், சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்துள்ளோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com