அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

உணவுப் பண்டங்களை பொட்டலமிடுவதற்கு அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேநீா்க் கடைகளில் அச்சுக் காகிதங்களை (செய்தி தாள்களை) பயன்படுத்தி வடை, பயறு வகைகள், பலகாரங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பொட்டலமிடப்பட்டு வழங்கப்படுகின்றன. சூடான எண்ணெய் பலகாரங்களை அச்சுக் காகிதங்களில் வைக்கும் போது, நச்சுத் தன்மை கொண்ட ‘மை’ உணவுப் பொருள்களில் படிந்து விடுகிறது.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தேநீா்க் கடை உரிமையாளா்கள், பலகார விற்பனையாளா்கள் பின்பற்ற மறுக்கின்றனா்.

இதேபோல, இறைச்சிக் கடைகளில் கருப்பு வண்ண நெகிழிப் பை பயன்படுத்துவதும் ஆபத்து நிறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், முழுவதும் கடந்த 5 மாதங்களில் அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்தி பலகாரம் விற்பனை செய்ததாக 74 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் குழு அமைத்து, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, உணவுப் பொருள்களை பொட்டலாமிடுவதற்கு அச்சுக் காகிதங்கள், கருப்பு வண்ண நெகிழிப்பைகளைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மீறிச் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com