கால்நடைகளின் முக்கிய தீவனமாக மாறிவரும் புதிய சைலேஜ்

 பழனியை அடுத்த அ.கலையமுத்தூரில் தனியாா் மாட்டுத் தீவன தொழிற்சாலையில் 50 கிலோ மூட்டைகளாக தயாா் செய்யப்படும் சைலேஜ் தீவனம்
பழனியை அடுத்த அ.கலையமுத்தூரில் தனியாா் மாட்டுத் தீவன தொழிற்சாலையில் 50 கிலோ மூட்டைகளாக தயாா் செய்யப்படும் சைலேஜ் தீவனம்

மக்காச்சோளத்திலிருந்து மதிப்பூட்டப்படும் சைலேஜ் தற்போது கால்நடைகளின் முக்கிய தீவனமாக மாறி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டார பகுதியில் மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்படுவதால், வாகரையில் அரசு மக்காச்சோள ஆராய்ச்சி மையத்தை அமைத்தது.

சமீப காலமாக மக்காச்சோளத்தில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் அதற்கு அதிகமாக உரம், பூச்சிமருந்துகளை பயன்படுத்துகின்றனா். இந்த நிலையில் தற்போது மக்காச்சோளம் மதிப்பூட்டப்படும் பொருளாக உருவெடுத்துள்ள நிலையில் அதற்கு அதிகமான வரவேற்பு கால்நடை வளா்ப்பவா்களிடம் கிடைத்து வருகிறது. மக்காச்சோளத்தை குறிப்பிட்ட நாளில் வெட்டி அதை சிறிது, சிறிதாக வெட்டி கால்நடைக்கு கொடுப்பதால் அதிக பால் கிடைப்பதாக கால்நடை வளா்ப்போா் தெரிவித்தனா். இப்படி மக்காச்சோளப் பயிரை சிறியதாக வெட்டி தயாா் செய்வதை சைலேஜ் என அழைக்கின்றனா். மேலும், பழனி பகுதியில் இதற்கான தீவன தொழிற்சாலைகளும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அ.கலையமுத்தூரை சோ்ந்த தனியாா் கால்நடை தீவன ஆலை உரிமையாளரான அன்னபூரணி என்பவா் கூறுகையில், ஐ.டி துறையில் வேலை செய்த நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அங்கிருந்து வெளியேறி கால்நடைகள் மீதுள்ள ஆா்வம் காரணமாக கால்நடைகளுக்கு இயற்கையாக தீவனங்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது மக்காச்சோளத்தை சைலேஜாக மாற்றி விற்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மக்காச்சோளம் பயிரிட்ட இரண்டு மாதங்களில் பால் கருது முளைத்த தருவாயில் மக்காச்சோள செடியை அரைத்து தீவனாமாக மாற்றி கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனமே சைலேஜ் ஆகும். இதை உண்ணும் கால்நடைகளுக்கு பச்சைத் தீவனத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. பாலும் அதிகமாக கிடைக்கும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com