ராமநாதபுரம் தமிழ்ச் சங்க துணைத் தலைவருக்கு இலங்கையில் தமிழியல் விருது

ராமநாதபுரம் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் வைகிங். எம்.எஸ். கருணாநிதிக்கு இலங்கை மட்டக்களப்பில் உள்ள எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வ. கனகசிங்கம் தமிழியல்

ராமநாதபுரம் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் வைகிங். எம்.எஸ். கருணாநிதிக்கு இலங்கை மட்டக்களப்பில் உள்ள எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வ. கனகசிங்கம் தமிழியல் விருதினை  மட்டக்களப்பு மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வழங்கினார்.

   இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் அமிர்தகழியில் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் வருடம் தோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் பெயரில் தமிழியல் விருதுகளை வழங்கப்படுகின்றன. அத்துடன்  ரொக்கப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

   சுமார் 400-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் 60 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

 இந்த விழாவிற்கு இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் ரூபி வலன்ரியா பிரான்சிஸ் தலைமை வகித்தார்.

   வவுனியா மாவட்ட வைத்தியசாலை நிர்வாகி ப. யோகானந்த், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிப்பாளர் சோ.திருச்செல்வம், மண்முனை மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே. குணநாதன் வரவேற்றுப் பேசினார்.

   விழாவில், அயல்நாட்டுப் படைப்பாளி என்ற முறையில் ராமநாதபுரம் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் வைகிங். எம்.எஸ். கருணாநிதிக்கு இலங்கை மட்டக்களப்பு மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கல்விமான் வ. கனகசிங்கம் தமிழியல் விருதும், ரொக்கப் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கினார்.

   பரிசைப் பெற்றுக் கொண்ட அவர் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த வழங்குவதாகவும் அறிவித்து, முதற்கட்டமாக ரூ. 50 ஆயிரத்தை வழங்கி பேசினார்.

  சேது சமுத்திர திட்டம், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தமைக்காக விருது வழங்கப்பட்டது.

   இவ் விழாவில் கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைக்காக துறையூர் வே. நாகேந்திரன், அலைக்குமிழ் என்ற நாவலுக்காக அகளங்கன், தேசபக்தர் நடேச அய்யர் வாழ்க்கை வரலாற்று நூலுக்காக அதன் ஆசிரியர் சாரல்நாடன், கல்யாணம் முடித்துப் பார் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக ஓய்வுபெற்ற ஆட்சியர் உடுவை.தில்லை நடராஜா, வீரவில்லாளி என்ற நாடக நூலுக்காக எஸ். முத்துக்குமரன், அவமானப்பட்டவனின் இரவு என்ற கவிதைக்காக ஜின்னாஹ் ஹரிபுத்திரன், பெரிய புராணத்தில் சைவ சித்தாந்தம் என்ற நூலுக்காக கு. ரஜீபன், அன்பு தந்த பரிசு என்ற சிறுவர் இலக்கியத்துக்காக கதை சொல்லி மாஸ்டர். சிவலிங்கம் ஆகியோருக்கு விருதுகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

         பல நூல்கள் எழுதியதற்காகவும், பல எழுத்தாளர்களை உருவாக்கியதற்காகவும் ஓ.கே. பாக்கியநாதன் உயர் தமிழியல் விருதினை இரா. நாகலிங்கம் என்ற அன்புமணிக்கும்,பேராசிரியர் அ. சண்முகதாசுக்கும் வழங்கப்பட்டது.

   இன நல்லுறவு தமிழியல் விருது சிங்கள மொழிப் படைப்பாளிகளான சுனந்த தேசப்பிரிய, விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டது.  முன்னதாக, அனைத்து எழுத்தாளர்களுக்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

  விழாவில் அம்பாறை மாவட்ட உதவி ஆட்சியர் கே. விமலநாதன், கிழக்கு பல்கலை.யின் வேளாண்மைத் துறை பேராசிரியர் எம். சுகிர்தரன், எழுத்தாளர்கள் மாத்தளை. வடிவேலு, அந்தணி ஜீவா, தி. ஞானசேகரன், கே.ஆர். டேவிட் ஆகியோர் உட்பட எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com