25 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கும் கமுதி நீதிமன்றம்: இடம் ஒதுக்கியும்  புதிய கட்டடம்  கட்டுவதில்  தாமதம்

கமுதியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 25 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி

கமுதியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 25 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் சொந்தக் கட்டடம் கட்ட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கடந்த 1992 ஆம் ஆண்டு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த நீதிமன்றம் கமுதி பழைய வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தனியார் கட்டடத்தில்
இயங்கி வந்தது. அப்போது இது குற்ற செயல்களை மட்டுமே விசாரிக்கும் நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது. பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 1994 ஆம் ஆண்டு சிவில் வழக்குகளையும் விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்று செயல்பட தொடங்கியது.
இக்கட்டடம் மிகவும் குறுகலான, அடிப்படை வசதிகள் குறைவாகவும், பொதுமக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இருந்ததால் கமுதி கோட்டைமேடுப் பகுதியில் உள்ள கதர் காதி கிராப்ட்டுக்கு சொந்தமான கட்டடத்தில் வாடகை ஒப்பந்த முறையில் செயல்படத் தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக கமுதி பகுதியில் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள் , பொதுநல வழக்குகள் அதிகரித்து வருவதால், இதற்காக நீதிமன்றத்திற்கு  வழக்குரைஞர்கள், பொதுமக்கள், காவல் துறையினர், பல்வேறு அரசு அதிகாரிகள் என நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கமுதி நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், வழக்குரைஞர்களுக்கு குடிநீர், கழிப்பறை, காத்திருப்போர் அறை என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் நீதிமன்ற வளாகம் அருகிலேயே திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்றும் அபாயத்தில் உள்ளனர்.
இங்கு பணியாற்றும் வழக்குரைஞர்கள், வழக்குகளுக்காக வரும் பொதுமக்களின் நலன் கருதி கமுதி நீதிமன்றத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தற்போது செயல்பட்டு வரும் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலேயே தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியத்துக்கு சொந்தமான 2.69 ஏக்கர் பரப்பளவு இடத்துக்கு ரூ.1.55 கோடியை தமிழக பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு கதர் கிராம வாரியத்துக்கு கொடுக்கப்பட்டது.  இருப்பினும் கட்டடம் கட்டுவதில் அரசு நிதி ஒதுக்க கவனம் செலுத்தாததால் நீதிமன்ற கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
 இதுகுறித்து கதர் கிராம வாரிய அதிகாரி ஒருவர் கூறியது:
பொதுப்பணித்துறை சார்பில் கதர் வாரியத்துக்குரிய இடத்திற்கான பணம் வந்துவிட்டது. இதனை அடுத்து பொதுப்பணித்துறையும், மாவட்ட நீதித் துறையும்  பத்திரப்பதிவுக்காக எப்போது அழைத்தாலும் கதர் கிராம வாரியம் தயாராக உள்ளது என்றார்.    
இதுகுறித்து கமுதி வழக்குரைஞர் சங்கத் தலைவர் முனியசாமி மற்றும் செயலர் சண்முகசுந்தரம் ஆகியோர் கூட்டாக கூறியது:
கமுதி  மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் தற்போது போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நீதிமன்றத்திற்கு வரும் பெண்கள், பொதுமக்கள் திறந்த வெளியில் , மழை வெயிலால் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட நீதித் துறை நிர்வாகம் தலையிட்டு புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி ஒதுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com