2019 ஜன.1 இல் 18 வயது பூர்த்தியானால் வாக்காளர் ஆகலாம்: ஆட்சியர்

2019 ஜன. 1 ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் நிலையில் உள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க இப்போதே விண்ணப்பம் அளிக்கலாம் என ராமநாதபுரம்


2019 ஜன. 1 ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் நிலையில் உள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க இப்போதே விண்ணப்பம் அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூரில் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் அருகில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஆர்.சுமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆ.செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேராவூர் ஊராட்சி மன்ற செயலாளர் சி.ஆனந்தி வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் மத்தியில் வாசித்துக் காண்பித்தார்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்துப் பேசியது: மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து 11,14,048 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 764 இடங்களில் 1367வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1.1.2019 ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
கல்லூரிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பாலித்தீன் பைகள் உபயோகிப்பதை தவிர்த்து வாழை இலைகளை பயன்படுத்தி உணவு சாப்பிடுங்கள். வீடுகளில் கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள் .திறந்த வெளிகளில் மலம் கழிப்பதை தவிர்த்திடுங்கள். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட குழந்தைகளை பழக்குங்கள் என்றார்.
வட்டாட்சியர் ஆர்.சிவக்குமார், பேராவூர் கிராமத் தலைவர்கள் கருப்பையா,சி.முருகன், ரா.முருகேசன், ராக்கு, காட்டூரணி கிராமத் தலைவர் சகாதேவன், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி ஆணையாளர் சேவுகப்பெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன் ஆகியோர் உள்பட அதிகாரிகள், கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com