ராமநாதபுரம், ராமேசுவரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

ராமநாதபுரத்தில் இந்து முன்னணி சார்பில் 39 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை நொச்சியூருணி கடற்கரையில்


ராமநாதபுரத்தில் இந்து முன்னணி சார்பில் 39 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை நொச்சியூருணி கடற்கரையில் கரைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 274 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை மண்டபம், நரிப்பையூர், பரமக்குடி ஆகிய இடங்களில் விநயாகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற்றன. சனிக்கிழமை ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஏர்வாடி,தேவிபட்டினம், ரெகுநாதபுரம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த போலீஸார் அனுமதி வழங்கினர்.
ராமநாதபுரம் ஓம்சக்திநகர், வசந்த நகர், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் தெரு, தாயுமானவர் சுவாமி கோயில் தெரு, செட்டியதெரு, வண்டிக்காரத்தெரு உள்பட நகரின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மாட்டினை தாவிப்பிடிக்கும் விநாயகர், மாட்டு வண்டி ஓட்டும் விநாயகர், சிங்க வாகனத்தில் மகிசாசூர விநாயகர், மயில் வாகன விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டன.
ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வழிவிடு முருகன் கோயில் முன்பாக சனிக்கிழமை வந்து சேர்ந்தது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஊர்வலத்தினை ஆர்எஸ்எஸ் அமைப்பு மாநிலச் செயலாளர் ஆ.ஆடலரசன் தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாநில நிர்வாகி பொன்னையா தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சரவணன், ரெத்தினசபாபதி, மாநிலப் பேச்சாளர் கெங்காதரன், பாஜக மாவட்டச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். வழிவிடு முருகன் கோயிலிலிருந்து தொடங்கிய ஊர்வலம் வண்டிக்காரத்தெரு, அண்ணா சாலை, எஸ்.எம்.அக்ரஹாரம், பெரியார் நகர் வழியாக நொச்சியூரணியில் நிறைவு பெற்றது.
பின்னர் அங்கு அனைத்து விநாயக சிலைகளும் கரைக்கப்பட்டன. ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி எஸ். வெள்ளத்துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் 18 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அக்னி தீர்த்தக்கடலில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் சிவசேனா மாவட்டத் தலைவர் சதீஷ், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஹரிதாஸ், மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.மகேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள் சனிக்கிழமை சீரணி அரங்கம் அருகே கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. மாலை 5 மணிக்குத் விநாயகர் ஊர்வலம் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் எம்.செந்தில்பாண்டி தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.பழனிவேல்சாமி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஒன்றியத் தலைவர் ஜி.மணிகண்டன், ஒன்றியப் பொதுச் செயலாளர் சி.மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சங்கிலியான் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com