திருவாடானை சிறைச்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானையில் சிதிலமடைந்துள்ள ஆங்கிலேயர் காலத்து சிறைச்சாலையை தியாகிகள் நினைவாக புதுப்பிக்க

திருவாடானையில் சிதிலமடைந்துள்ள ஆங்கிலேயர் காலத்து சிறைச்சாலையை தியாகிகள் நினைவாக புதுப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், தியாகிகளின் வாரிசுகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 திருவாடானையில் ஒரே வளாகத்தில் நீதிமன்றம், கருவூலம், சிறைச்சாலை ஆகியவை செயல்பட்டு வந்தன. இதில் நீதிமன்றமும், கருவூலமும் புதிய கட்டடம் கட்டப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டன. ஆனால் திருவாடானை கிளைச் சிறைச்சாலை மட்டும் சிதிலமடைந்ததால் கடந்த ஆண்டு முதல் அங்கு செயல்பட வில்லை. இந்த சிறைச்சாலை ஆங்கிலேயர் காலத்து சிறைச்சாலையாகும்.
திருவாடானையில் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்ட ம் புரட்சியாக வெடித்த போது சிறைச்சாலையில் இளைஞர்களின் தலைவனாக விளங்கிய ராமநாதன், சின்ன அண்ணாமலை ஆகியோர் இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை மீட்க மங்களநாதன்குளம் அருகே திரண்ட இளைஞர்கள்  சிறைச்சாலையின் பூட்டை உடைத்து சின்ன அண்ணாமலையையும் ராமநாதனையும் மீட்டு பின்னர் சிறைச்சாலை, நீதிமன்றம் மற்றும் கருவூலத்தையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
 இந்த சிறைச்சாலை சுதந்திரத்துக்குப் பின் மீண்டும் மறுபுனரமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
 இதைத் தொடர்ந்து இந்த சிறைச்சாலையில் திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம்,திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ள விசாரணைக் கைதிகள்   அடைத்து வைக்கப்பட்டனர். தற்போது சிறைச்சாலை பராமரிப்பின்றி மிகுந்த சேதமடைந்து வந்ததால் செயல்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ளது.
  சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுச் சின்னமான இந்த சிறைச்சாலை செயல்படாமல்  சிதிலமடைந்து வருவது மன வருத்தத்தை தருவதாக சுதந்திரப்போராட்ட வாரிசுகளும் சமூக ஆர்வலரும் தெரிவித்தனர். 
எனவே அரசு தனிக்கவனம் செலுத்தி சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவுச் சின்னமான இந்தச் சிறைச்சாலையை புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com