பரமக்குடியில் முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரிக்கை

பரமக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதால் ஒரு குடம் தண்ணீர் ரூ 5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பரமக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதால் ஒரு குடம் தண்ணீர் ரூ 5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகர் பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகர் பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வந்த குடிநீர் தேவையில் தற்போது 5 லட்சம் லிட்டர் தண்ணீரில் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. 
மேலும் கள்ளிக்கோட்டை, காட்டுப்பரமக்குடி பகுதியில் உள்ள நீர் ஊற்று நிலையங்களில் முறையான பராமரிப்பில்லாததால், தற்போது வறட்சியின் தேவையின்போது குறைந்த அளவிலான குடிநீர் கிடைக்கிறது. 
இதனால் நகரில் வசிக்கும் மக்களுக்கு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கி வந்த நகராட்சி நிர்வாகம் 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்து வருகின்றனர். 
அவ்வாறு வழங்கப்படும் தண்ணீரும் போதிய அளவு கிடைக்காமல் நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 
இதனை பயன்படுத்தி தனியார் குடிநீர் விற்பனையாளர்கள் நகர் பகுதி எல்கைக்குள்ளேயே ஆழ்துளை அமைத்து டேங்கர் லாரிகள், மினி வேன்களில் எடுத்து வந்து குடம் ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ. 7 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
 தனியார் மூலம் குடிநீர் விற்பனை செய்வோருக்கு நகர் பகுதியிலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகத்தால் போடப்பட்டுள்ள ஆழ்துளைகளில் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், தண்ணீரின் சுவை உப்புத்தன்மையுடன் இருப்பதான இடங்களை தேர்வு செய்து நகராட்சியின் லட்சக்கணக்கான நிதி வீணடிக்கப்பட்டு வருகின்றன. 
இதுபோன்ற நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். 
வைகை ஆற்றுப்பகுதியிலேயே தனியார் நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து நகருக்கு தேவையான குடிநீர் வழங்குவதைப் போல், நகராட்சி நிர்வாகமும் நீர் ஆதாரம் உள்ள இடத்தை தேர்வு செய்து மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com