ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஷ்வரி வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஷ்வரி வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 4 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
 ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டி.புவனேஸ்வரி (38) தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவராவிடம் வெள்ளிக்கிழமை  மனுத்தாக்கல் செய்தார். 
பி.எஸ்.சி வேதியியல் பட்டதாரியான இவர் திருவாடானை அருகே பட்டமங்களம் பகுதியைச் சேர்ந்தவர். அவரது கணவர் ஆர்.திருநாவுக்கரசு.  இவர்களுக்கு தேவதர்ஷன், ஜனனி ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். அவர் நாம் தமிழர் கட்சியின் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலராகவும் உள்ளார்.  புவனேஸ்வரிக்கு மாற்று வேட்பாளராக பட்டமங்களத்தைச் சேர்ந்த கலைஜோதி மனுத்தாக்கல் செய்தார்.
வேட்புமனுத்தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், சுயேச்சை வேட்பாளராக மதுரை வழக்குரைஞர் விநாயகமூர்த்தி முதல் நாளில் மனுத்தாக்கல் செய்தார். புதன்கிழமை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை முற்போக்கு சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பி.லோகநாதன் மனுத்தாக்கல் செய்தார்.  சென்னை அம்பத்தூர் பள்ளிக்குப்பம் ராஜூ நகரைச் சேர்ந்த பி.லோகநாதன் (41) யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.திருமணமாகாதவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை  டி.புவனேஸ்வரியும், அவரைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம்  பாம்பாட்டி கிராமத்தைச் சேர்ந்த வைரசீமான் என்பவர் சுயேச்சையாகவும் மனுத்தாக்கல் செய்தனர். இத் தொகுதிக்கு வெள்ளிக்கிழமை வரை 4 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 
பரமக்குடி: பரமக்குடி சட்டப்பேரவை(தனி)த் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் நயினார்கோவில் ஒன்றியம் அ.காச்சான் கிராமத்தைச் சேர்ந்த கோட்டழகு என்பவர் மனைவி பி.ஹேமலதா(33) வேட்பாளராகப் போட்டியிடுகிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2016 முதல் கட்சியின் உறுப்பினராக பணியாற்றி வந்த இவருக்கு பரமக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராமன் முன்னிலையில் தனது வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com