நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழக்கரை டி.எஸ்.பி., எஸ்.ஐ.-க்கு நோட்டீஸ்
By DIN | Published On : 04th April 2019 07:28 AM | Last Updated : 04th April 2019 07:28 AM | அ+அ அ- |

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சார்பு ஆய்வாளருக்கு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கட்டையன்வலசையில் வசிப்பவர் பொன்னுச்சாமி (67). இவருக்குச் சொந்தமான 31 சென்ட் இடத்தை அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் வெள்ளைச்சாமி போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பொன்னுச்சாமி வழக்குத் தொடர்ந்தார்.
அதன்படி பொன்னுச்சாமிக்கே இடம் சொந்தமானது என மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜனவரியில் தீர்ப்பளித்தது. இதையடுத்து இடத்தை சுத்தப்படுத்த பொன்னுசாமி சென்றார். இதையறிந்த வெள்ளைச்சாமி தனது இடத்தை பொன்னுசாமி ஆக்கிரமிப்பதாக திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் முத்துகுமார், கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது பொன்னுசாமி நீதிமன்ற தீர்ப்பை காட்டியுள்ளார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் அதை ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையடுத்து பொன்னுசாமி தரப்பில் காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வரும் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், சார்பு ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டது.