வாக்காளர் விழிப்புணர்வு: கலாம் நினைவிடத்தில் 51 மணல் சிற்பங்கள்
By DIN | Published On : 14th April 2019 01:21 AM | Last Updated : 14th April 2019 01:21 AM | அ+அ அ- |

ராமேசுவரம் அப்துல்கலாம் தேசிய நினைவிடம் அருகே 51 வகையான வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மற்றும் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவகம் அருகே சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக 51 மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் நரேந்திரசிங் பர்மார், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப் உட்பட பலர் பங்கேற்று பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, இந்திய கடலோர காவல்படை கமாண்டர் எம்.வெங்கடேஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் திரு.கேசவதாசன், மணல் சிற்பங்களை அமைத்த கலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பா.சரவணன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு, மீனவக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு புக் ஆப் ரெக்கார்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.