தீயணைப்புத் துறையினர் வாக்களிப்பதில் சிக்கல்

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்புத் துறையினர் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்புத் துறையினர் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 190-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 
ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலிருந்தும் தலா 4 பேர் வீதம் தேர்தல் பணியில் ஈடுபடவும், மற்ற பணியாளர்கள் விடுமுறை எடுக்காமல் பணியில் இருக்கவும் தேர்தல் பணியில் ஈடுபடும் தீயணைப்புப் பணியாளர்கள், ஏப்ரல் 16 ஆம் தேதி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
தேர்தல் பணியில் ஈடுபடும் தீயணைப்பு ஊழியர்களுக்கு இதுவரை தபால் வாக்குப் படிவங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், தீயணைப்புத் துறையினர் ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தல், பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தீயணைப்புத் துறை பணியாளர்கள் கூறியது: தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும், தீயணைப்பு நிலையப் பணியில் ஈடுபடுவோருக்கும் தபால் வாக்களிக்க, விண்ணப்பங்களோ, அதற்கான உத்தரவோ வரவில்லை.
இது குறித்து மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சரியான பதிலளிக்க மறுக்கின்றனர். இதனால், சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாத நிலையும் உள்ளது என்றனர்.
இது குறித்து மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் சாமிராஜ் தெரிவித்தது: மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள், தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் தபால் வாக்களிப்பது குறித்து எவ்வித அறிக்கையும் கேட்கவில்லை. 
தேர்தல் பணி மற்றும் தீயணைப்பு நிலையங்களில் பணியில் உள்ள இவர்கள், நிலையங்களை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதால், சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com